உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எழுமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள், மருந்துகள் இருப்பு மற்றும் உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, எழுமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும், புறநோயாளிகள் பிரிவு, மருத்துவப் பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆனந்தம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு,, குழந்தைகளுக்கான தடுப்பூசி, சமையல் கூடம், சமையல் பொருட்களின் இருப்பு, குழந்தைகளின், எடை, உயரம் பரிசோதனை ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும், எழுமாத்தூர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கிருஷ்ணாபுரம் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு, உணவு பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து, ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில் செயல்பட்டு வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அவல்பூந்துறை குளத்தில் தனியார் நிறுவனம் சார்பில் சீமை கருவேல மரங்களை அகற்றி, மண் திட்டுகள் ஏற்படுத்தி அதில் மரக்கன்றுகள் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து, அலுவலர்களுடன் விவாதித்தார். மேலும், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், துணை ஆட்சியர் (பயிற்சி) சிவப்பிரகாஷ் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.