புதன், 22 பிப்ரவரி, 2023

தி.மு.க - நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் மோதல்.. கல்வீச்சில் 2 தரப்பினருக்கும் மண்டை உடைந்தது.. போலீசாரும் தாக்கப்பட்டதால் பரபரப்பு..!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரம் 25-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓய்கிறது. இதை முன்னிட்டு அனைத்துக்கட்சி தலைவர்களும் ஈரோட்டில் சூறாவளி பிரசாரத்தை நடத்தி வருகிறார்கள். உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கும் கிழக்கு இடைத்தேர்தலில் நேற்று தி.மு.க. மற்றும் நாம்தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் திடீர் கலவராமாக மாறியதால் பெருமு் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க.வினர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே தேர்தல் பணிமனைகள் வைத்து அந்தந்த பகுதி மக்களிடம் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வும் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை உழைத்து வருகிறார்கள்.

இங்கு 2 பெரிய கூட்டணிகளுடன் தே.மு.தி.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் போட்டியில் இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் இந்த போட்டியில் உள்ளனர்.

இதனால் தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க பல்வேறு வீதிகள் வழியாக சென்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக அவர் நேற்று இரவு 7.30 மணி அளவில் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் அருகே காவிரி ரோடு பகுதியில் சீமான் வந்த வழித்தடத்தில், அவருக்கு முன்பாக கட்சியினரின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அப்போது அங்கு தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் சிலர் குமு்பலாக நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நாம்தமிழர் கட்சியினரை பார்த்து எதிர்ப்பு கோஷம் எழுப்பினார்கள். அதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியினரும் கோஷம் எழுப்பினார்கள். வாகனங்களில் சென்றவர்கள் அங்கேயே இறங்கி, நின்று கொண்டிருந்த தி.மு.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் 2 தரப்பினருக்கும் இடையே கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தாக்கியதில் தி.மு.க. தொண்டர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தி.மு.க.வினர் கையில் வைத்திருந்த கட்சிக்கொடி கட்டி இருந்த இரும்பு குழாய்களை வைத்து சரமாரியாக தாக்கத்தொடங்கினார்கள். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினரும் தங்கள் கட்சிக்கொடி கட்டி இருந்த கம்பி குழாய்களை எடுத்து வீசினார்கள். இந்த தாக்குதலில் 2 தரப்பை சேர்ந்தவர்களும் மண்டை உடைக்கப்பட்டு காயம் அடைந்தனர். இந்த திடீர் கலவரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் 2 தரப்பினரையும் சாமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அதிரடியாக தாக்கிக்கொண்ட 2 தரப்பினரும் சமாதானம் செய்ய வந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். போலீசார் அதிகம் பேர் குவிந்ததால் சற்று தாக்குதல் குறைந்தாலும் வாக்குவாதம் தொடர்ந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 தொண்டர்களை தி.மு.க.வினர் இழுத்துச்சென்று விட்டதாகவும், அவர்களை மீட்டுத்தரவும் வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் தி.மு.க.வினர் அப்படி யாரையும் நாங்கள் இழுத்துச்செல்லவில்லை என்று பதில் அளித்தனர், இந்த வாக்குவாதம் மீண்டும் மற்றி மோதல் ஏற்படும் வாய்ப்பு வந்தது.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து கொண்டே வந்தனர். அவர்கள் அங்கு கைகலப்பு நடப்பதை பார்த்துக்கொண்டே, பிரசாரம் செய்து கொண்டு வந்தவர், இங்கே போலீசார் விரைந்து வாருங்கள். தி.மு.க. குண்டர்கள் கலவரம் செய்கிறார்கள். போலீசார் வாகனங்களுக்கு முன்னால் வரவும். அன்பு மக்களே பாருங்கள். இதுதான் திராவிட அரசியல். திராவிட கட்சிகள் செய்த சாதனை. இந்த குண்டர்களை ஏவி, ஒரு தூய அரசியலலை சாக்கடை ஆக்கியது. நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் விவசாயி என்று கலவரத்தை தங்களுக்கு சாதகமாக பிரசாரம் செய்து கொண்டே அந்த பகுதியை கடந்து சென்றனர். இங்கே கலவரம் செய்பவர்களை போலீசார் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியபடி பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு சென்றனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார், மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மற்றும் போலீசார் வந்தனர். அத்துடன் துணை ராணுவப்படையினர், ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே இந்த கலவரத்தில் மண்டை உடைக்கப்பட்டவர்களை போலீசார் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அதுமட்டுமின்றி, மாவட்ட காவல் துறை ண்காணிப்பாளர் சசிமோகன், 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அதைத்தொடர்ந்து பேசிய தி.மு.க. பொறுப்பாளர் ஒருவர், தேர்திலில் தி.மு.க. வெற்றி 100 சதவீதம் உறுதி செய்து விட்டதால், சீமான் போன்றவர்கள் தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்கள். இதில் நமது தோழர்கள் காயம் அடைந்து உள்ளனர். ஆனால், தேர்தலை கருத்தில் கொண்டு நாம் அமைதியாக கலைந்து செல்வோம் என்று பேசினார். அதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அந்த பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்தனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சென்று காயம்பட்ட கட்சியினரை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

இந்த திடீர் மோதலில் தி.மு.க. கட்சியின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முகமது யூனுஸ்(வயது 56) உள்பட 6பேரும், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சென்னையை சேர்ந்த ரவிக்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த மதன் (22), விழுப்புரம் மாவட்டம் வளையபட்டு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்(40), ஈரோட்டை சேர்ந்த இம்மானுவேல்(31) உள்பட 5 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியாற்றும் திருவண்ணாமலை மாவட்டம் போலூர் பகுதியைசேர்ந்த போலீஸ் பிரபுதேவா(24), வேலூர் மாவட்டம் புத்தூர் பகுதியை சேர்ந்த போலீஸ் அன்புமணி(40), காட்பாடி லத்தேரி பகுதியை சேர்ந்த போலீஸ் நிஷாந்த்குமார் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். தி.மு.க - நாம்தமிழர்கள் தொண்டர்கள் 11 பேரும், போலீசார் 3 பேரும் உயிருக்கு ஆபத்து இன்றி நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த திடீர் கலவரம் ஈரோடு தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: