புதன், 22 பிப்ரவரி, 2023

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்..!


ஈரோடு பெரியார் நகரில் உள்ள தி.மு.க., பணிமனையில் ஈரோடு மாவட்ட அனைத்து இஸ்லாமிய கட்சிகள், இயக்கங்கள் மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் ஆலோசனை கூட்டம், தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் தலைமையில் நடந்தது, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள், ஜமாத்தார்கள் சார்பில் பேசினார். 


தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம் நாசர் பேசுகையில் ...

முதல்வராக கருணாநிதி இருந்தாபோது, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைத்து இஸ்லாமியர்களுக்கு, பயணத்துக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில், அதை சில எண்ணிக்கைகளில் குறைத்தனர். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் இறந்த பின்பு, அவர்களின் அடக்க ஸ்தலமான கபர்ஸ்தானுக்கான இடம் குறைவாக உள்ளதால், உடல்களை அடக்கம் செய்யும்போது, அவை மண்ணில் செரிக்காமல் போகிறது. எனவே, மாநகருக்கு அப்பால் இருந்தாலும், 5 ஏக்கர் நிலம் கோரி உள்ளனர். 

சிறைகளில் வாடும் இஸ்லாமியர்கள் உள்ளிட்டவர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் தவறு செய்யவில்லை என நாங்கள் கூறவில்லை. அவர்களது தவறுக்கு, 20 ஆண்டுகளுக்கு மேலும், நீதிமன்றம் விதித்த தண்டனை காலத்தை கடந்தும் சிறையில் உள்ளதால், அவர்களை விடுவிக்க வேண்டும், என வலியுறுத்தி உள்ளனர், இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பேசினார்.

நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு பேசுகையில்.. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் பைபாஸ் சாலை விரைவில் அமையும். இங்குள்ள அமைச்சர் முத்துசாமி, ஏற்கனவே இக்கோரிக்கையை முன்வைத்து, இப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, ஓரமாக நட்டு, சாலையை விரிவுபடுத்த வேண்டும், என கேட்டுள்ளார். அவை பரிசீலனையில் உள்ளது.
வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டண சலுவை பற்றி முதல்வரிடம் தெரிவிக்கப்படும். இது, நிதி தொடர்பானதாக உள்ளதால், முதல்வர் அறிவிப்பார். 

இஸ்லாமியர்களின் உடல் நல்லடக்கத்துக்கான, 5 ஏக்கர் நிலம் பற்றியும், அமைச்சர் முத்துசாமி, கலெக்டரிடம் ஏற்கனவே முயன்று வருகிறார். விரைவில் தீர்வு காணப்படும் என பேசினார்.


பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ வேலு பேசுகையில்...

நான், குரான் படித்துள்ளேன். அதில் குறிப்பிட்டுள்ள ஈகை, மருத்துவம், மனித ஒழுக்கும் பற்றி அதிகம் படித்திருக்கிறேன். நீங்கள் இங்கு முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கிடைக்கும் இடத்தில்தான் கோரிக்கை வைக்கப்படும். கல்லில் நார் உரிக்க முடியாது, அதுபோல, எதிர் தரப்பினரிடம் இவற்றை எதிர் பார்க்க முடியாது, 
உங்களது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும். 

அவற்றில் பல, நிதி, பிற துறைகளுடன் இணைந்து செயல்படுத்த வேண்டி உள்ளதால், முதல்வரிடம் பேசி தீர்வு காணப்படும் என பேசினார்.


இறுதியாக, தலைமையுரையாற்றிய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் பேசுகையில் ...

உலமாக்களுக்கான ஓய்வூதியம், 1,500 ரூபாயில் இருந்து முதல்வர் ஸ்டாலின், 3,000 ரூபாயாக உயர்த்தினார். பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தல புனரமைப்புக்கான நிதி, 6 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வழிபாட்டு தலங்களுக்கு மின் கட்டண சலுகை, கருணாநிதி ஆட்சியில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சியின் போது நீக்கப்பட்டது அதனை தற்போது கோரி உள்ளனர் என்றார்.


தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் ஃபாரூக், ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ், காங்., வேட்பாளர் இளங்கோவன் உள்ளிட்ட 500க்கும் மேற்ப்ட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் அப்துல்லா, திமுக பிரமுகரும், கொடுமுடி முத்துவல்லியுமான அபூபக்கர், ஜானகி அம்மாள் லே-அவுட் சையது முஸ்தபா, ஜெயினுலாபுதீன், கே.எஸ்.நகர் ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: