புதன், 1 மார்ச், 2023

சமையல் சிலிண்டரின் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்..!


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியீட்டுள்ள அறிக்கையில்...

வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 50/-ம், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள எரிவாயு உருளையின் விலை ரூ. 350.50/ம் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு  இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இடைவிடாமல் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், ஒன்றிய பாஜக அரசு போதாக்குறைக்கு சமையல் சிலிண்டரின் விலைகளை உயர்த்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை மற்றும் பண வீக்கத்தால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்வதறியாது திகைத்து வரும் சூழலில் இந்த விலை உயர்வு பாமர மக்களின் தலையில் மேலும் பேரிடியாக விழுந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வாங்க வாய்ப்பிருந்தும் சராசரியாக 7 சிலிண்டர் மட்டுமே வாங்குகிறார்கள்.

இனிமேல் இந்த எண்ணிக்கையும் குறையும், சமையல் சிலிண்டருக்கான மானியத் தொகையையும் முழுமையாக ஒன்றிய அரசு வழங்குவதில்லை, மூன்று மாநிலங்களின் தேர்தல்கள் முடிந்த பிறகு இந்த விலை உயர்வுகளை பாஜக அரசு அறிவித்து நாட்டு மக்களை வஞ்சித்துள்ளது. இந்த விலை உயர்வு எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்துள்ளது பாஜக அரசு.

எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை முழுமையாக வழங்கிட வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

# KBalakrishnan #CPIMTN #TNCPIM


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: