வெள்ளி, 10 மார்ச், 2023

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் கொடுக்கப்பட்ட டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா?


தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பரவலாக பேசப்பட்ட இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. 

இந்த இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.இவ்வளவு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் காங்கிரஸ் - அ.தி.மு.க. வேட்பாளருக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் பிரசார களத்தில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் கடந்த 40 நாட்களாக ஈரோட்டிலேயே தங்கி தேர்தல் பணியாற்றி வந்தனர். இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு கவுரவ பிரச்சனையாக இருந்தது. 

இதே போல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அவர்களும் கடுமையாக போராடினர். அரசியல் கட்சியினருக்கு அங்கீகாரம் பெறும் தேர்தலாக அமைந்தாலும் இந்த தொகுதி வாக்காளர்களுக்கு ஜாக்பாட்டாகவே மாறியது. தேர்தல் தேதி ஜனவரி மாதம் 18-ந்தேதி அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. 

அன்று முதல் ஈரோடு தொகுதியில் பணமழை கொட்ட தொடங்கியது.பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், பண்ணை வீடுகளில் தங்கியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் தொகுதி முழுவதும் எக்ஸ்யூவி கார்களின் அணிவகுப்பும் அதிக அளவில் இருந்தது, தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் காரணமாக பொதுமக்கள் வேலைக்கு செல்வதை விட்டு விட்டு கடந்த 40 நாட்களாக பிரசாரத்தில் குதித்தனர். தினமும் அவர்கள் பிரசாரத்துக்கு சென்று ரூ.1000 வரை சம்பாதித்தனர். இதனால் மதுகடைகள், ஓட்டல்களில் 500 ரூபாய் நோட்டு, 2000 ரூபாய் நோட்டாகவே இருந்தது. 

இதனால் கடைக்காரர்கள் சில்லரை கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர், அதோடு இல்லாமல் பிரியாணி, மது, ஓட்டுக்கு பணம், சேலை, லுங்கி, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் என ஏராளமான பரிசுபொருட்கள் அரசியல் கட்சியினர் வாரி வழங்கினர். 

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீது அனைவருக்குமே பொறாமை ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ், நகைச்சுவை வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டது. சாதாரணமாக 4 பேர் உள்ள ஒரு குடும்பத்தில் பணம், பரிசு பொருட்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் ஒரு குடும்பத்துக்கு கிடைத்தது. தேர்தல்நேரம் நெருங்க நெருங்க வாக்காளர்கள் இன்னும் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தனர். அதே போல் வாக்குப்பதிவு அன்றும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் டோக்கன் விநியோகிக்கப்பட்டது. 

தற்போது தேர்தல் முடிந்து நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் கொடுத்த டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் காத்து கிடக்கின்றனர். பொதுவாக தேர்தல் நேரத்தில் இரவு நேரங்களில் மட்டுமே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டது. அதே போல் தற்போதும் இரவில் யாராவது பரிசு பொருட்களுடன் வருவார்களா என்று பொதுமக்கள் காத்து கிடக்கின்றனர். தேர்தல் முடிந்து 8 நாட்களாகியும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு இன்னும் ஏராளமானவர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசியல் கட்சியினர் கொடுத்த பணத்தை வைத்து தாராளமாக செலவு செய்து வருகிறார்கள். 

தேர்தல் அலை ஓய்ந்தும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வசதியாகவே உள்ளனர். தொடந்து பொதுமக்களிடம் பணபுழக்கம் அதிகமாகவே உள்ளது. டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா? என்று தங்கள் பகுதியில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகளை தினமும் கேட்டு வருகிறார்கள்.தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கிழக்கு தொகுதி மக்கள் அதற்குள் தேர்தல் முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: