திங்கள், 9 அக்டோபர், 2023

ஈரோட்டில் அதிக வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி


அதிக வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக ராணுவ வீரர்களிடம் ரூ. 1,200 கோடி மோசடி; கலெக்டர் அலுவலகம் முன் ஆண், பெண் தரையில் படுத்து அழுது, புரண்டு களேபரம்.

அதிக வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக கூறி ராணுவ வீரர்களிடம் ரூ. 1,200 கோடி மோசடி செய்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆண், பெண் தரையில் படுத்து அழுது, புரண்டு களேபரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூரைச் சேர்ந்த ராணுவ வீரர் செல்வம், பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக அளித்துள்ள மனு விவரம்:
நாங்கள் அனைவரும் ராணுவ வீரர்கள். எங்களில் பலரை தொடர்பு கொண்ட ஈரோட்டை சேர்ந்த யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனத்தினர் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2 தவணைகளாக ரூ. 9 ஆயிரம் வீதம் ஒரு மாதத்துக்கு ரூ. 18 ஆயிரம் என கணக்கிட்டு 10 மாதங்களுக்கு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பிக் கொடுப்பதாக கூறினர்.


இதேபோல, ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் 10 மாதங்களில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரமும், ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் ஒரே தவணையாக 18 மாதங்களில் ரூ. 15 லட்சமும், ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் 5 வருடங்களுக்கு வருடத்தில் 4 தவணைகளாக ரூ. 83 லட்சம் திருப்பித் தருவதாகவும் கூறினர்.
அதை நம்பி நாங்களும், எங்களுக்கு கீழ் பலரும் என ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தோம்.
முதல் 2 மாதங்கள் மட்டும் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுத்த நிறுவனத்தினர் அதன்பின் கடந்த 2 வருடங்களாக பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
பல முறை கேட்டும், வாட்ஸ் அப்பில் ஆடியோ, விடியோ மட்டும் அனுப்பி இந்த மாதம் தருகிறோம், அடுத்த மாதம் தருகிறோம் என தவணை சொல்லிக் கொண்டே வருகின்றனர்.
இதுகுறித்து, மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எங்களிடம் ஏமாற்றப்பட்ட தொகை சுமார் ரூ. 1,200 கோடியை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், ஒரு குழுவினர் தாங்களால் சிலரை நம்பி பணம் கொடுத்திருந்தோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மற்றொரு குழுவினர் நாங்களும் பணம் கொடுத்து ஏமாந்துதான் உள்ளோம், நாங்களும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளிக்கவே வந்துள்ளோம் என கூறினர்.
ஒருகட்டத்தில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ் நிலை உருவானது.
இதனால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது முதலாவதாக மனு அளிக்க வந்திருந்தவர்களில் பெண் ஒருவர் திடீரென ஓலமிட்டு அழுதார். அவருடன் வந்த மற்ற பெண்களும் மற்றொரு குழுவினரை நோக்கி கூச்சலிடத் தொடங்கினர்.
இதனால், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முயன்றனர்.
ஆனால், கலெக்டர் அலுவலகம் நுழை வாயில் முன்பு வந்த அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு ஆணும், பெண்ணும் திடீரென தரையில் படுத்து உருண்டு, புரண்டு அழுது, தங்களது பணத்தை மீட்டுத் தந்தால்தான் போவோம் என கூறி களேபரத்தில் ஈடுபட்டனர். 
இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களை அழைத்துப் பேசி, இதை முறையாக நீங்கள் ஒருங்கிணைந்து பொருளாதாரக் குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை கோர வேண்டும் என நடை முறைகளை கூறி அனுப்பி வைத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: