ஞாயிறு, 12 நவம்பர், 2023

பறவைகளுக்காக 20வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடிய மக்கள்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வடமுகம் வெள்ளோடு ஊராட்சி பகுதியில் 215 ஏக்கர் பரப்பளவில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலியா, சைபீரியா, இலங்கை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், பாம்பு தாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றி வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன் கரைவழி, செம்மாண்டாம் பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர், கருக்கங்காடுவலசு ஆகிய கிராமங்கள் உள்ளன. தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகளை வெடித்தால், வெள்ளோடு சரணாலயத்திற்கு வரும் பறவைகள் பாதிக்கப்படும் என்பதால், இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், 20வது ஆண்டாக நடப்பாண்டும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறும்போது பறவைகள் சரணாலயம் அருகில் உள்ளதால் தீபாவளி பண்டிகையை வெடி வெடிக்காமல் கொண்டாட நாங்கள் முடிவு செய்தோம். அதன்படி 20வது ஆண்டாக நடப்பாண்டும் இன்று (நவ.12) ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடிக்காமல் கொண்டாடி வருகிறோம். தீபாவளி அன்று மட்டுமல்ல இங்குள்ள கோவில்களில் நடைபெறும் விசேஷங்களில் கூட நாங்கள் வெடி வெடிக்காமல் அமைதியான முறையில் கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, தரை சக்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள் என்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: