புதன், 22 நவம்பர், 2023

ஈரோட்டில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, அன்னை சத்யா நகர் பகுதியில், மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:- ஈரோடு மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெய்த கனமழையால் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள பாலம் முதல் அக்ரஹாரம் வரையிலான பாலத்தை சுத்தம் செய்து ஓடையினை ஆழப்படுத்தி பாலங்களை புனரமைத்து கரைகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதற்கான நிதி பெற்றவுடன் பணிகள் துவங்கப்படும். அவ்வாறு பணிகள் நிறைவடையும் போது தண்ணீர் வரும் வாய்ப்புகள் குறையும். அதே போன்று, சத்யா நகர் அடுக்குமாடியினை இணைக்கின்ற தரைப்பாலம் உள்ளது. அந்த பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அக்ரஹாரம் பாலத்திற்கு கீழே ஒரு மேடு உள்ளது. அதனை சீர் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மழைநீரால் பாதித்த இடங்களிலிருந்து தண்ணீரை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முழுமையாக வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இனிவரும் காலங்களில் மழைநீரால் பாதிக்கப்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த அதற்கான விரிவான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து, சுக்கிரமணியவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்டவற்றை வழங்கிடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் மருத்துவர் பிரகாஷ், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: