வெள்ளி, 8 டிசம்பர், 2023

மிக்ஜாம் புயல் | அரசுடன் இணைந்து 3 ஆயிரம் மருத்துவர்கள் மருத்துவ பணி மேற்கொள்ள திட்டம்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படாத வகையில் அரசுடன் இணைந்து 3 ஆயிரம் மருத்துவர்கள் இணைந்து மருத்துவ பணி மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையில் புதிய தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் பேட்டியளித்தார்.

ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள லட்சுமி துரைசாமி மஹாலில், இன்று (டிச.8) முதல் வரும் 10ம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் 78 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த மாநாட்டில் வரும் 2024ம் ஆண்டிற்கான அகில இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் மாநில தலைவராக ஈரோட்டை சேர்ந்த மருத்துவர் அபுல்ஹசன் பதவியேற்றார்.

இம்மாநாட்டில் மருத்துவ துறை இவ்வுலகில் சந்தித்து வரும் பெரும் சவால்களையும் அதற்கு தீர்வு காணும் வகையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்கள் குறித்தும் பல்வேறு நவீன சிகிச்சை மேடையில் குறித்தும் மருத்துவர்களுக்கு சிறப்பு கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து, இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையில் புதிய தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டு போல, மாநில மாநாடு இன்று துவங்கி, 10 வரை நடக்கிறது. இன்று, மருத்துவ செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இன்றும், நாளையும் மாநில அளவில், 1,500 டாக்டர்களுக்கு மேல் பங்கேற்கும் மருத்துவ துறை சந்திக்கும் சவால்கள், புதிய கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்குகள் நடத்த உள்ளோம். ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் டாக்டர் சரத்குமார் பேச உள்ளார்.


தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட நிலையில், இறுதி போட்டி நாளை ஈரோட்டில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை மதுரை மருத்துவ கல்லூரி அணியினர் மோத உள்ளனர். 
இதை தொடர்ந்து ஆண்டு தோறும் மாநில அளவிலான மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறும்.

ஐ.எம்.ஏ., சார்பில் ‘ஜீவன்’ என்ற பெயரில், திடீரென மனிதர்களுக்கு ஏற்படும் மூச்சு திணறல், மாரடைப்பு போன்றவற்றில் இருந்து, வீட்டில் உள்ளவர்களே மருந்து இன்றி, உயிர் காக்கும் முறை குறித்து பயிற்சி வழங்க உள்ளோம். பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்றும், வீடுவீடாக சென்றும் பயிற்சி தர உள்ளோம். 

குறிப்பாக 2024ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி அளிக்க உள்ளது,மாரடைப்பு,விபத்து போன்ற நேரங்களில் இதயம் நின்று விட்டால் நின்று போன இதய துடிப்பு செயல்படுவது மூச்சு பயிற்சி போன்ற பயிற்சிகளை ஜீவன் என்ற பெயரில் அளிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இந்த பணிக்காக 2500 மருத்துவர்கள் வீடு வீடாக சென்று 8 கோடி மக்களுக்கு சென்றடையும் வகையில் பயிற்சி அளிக்க உள்ளனர்.

‘மெண்டல் ஹெல்ப் லைன் திட்டம்’ துவங்கி, மன இறுக்கம், தோல்வியால் மன உளைச்சலுக்கு பாதிப்போருக்கும், தற்கொலை எண்ணம் உள்ளோருக்கும் சிசிக்சை, ஆலோசனை வழங்கும் திட்டத்தையும் துவங்குகிறோம்.
ஐ.எம்.ஏ., ஆற்றல் திட்டம் மூலம் இளம் மருத்துவர்கள், பிற மருத்துவர்கள் தங்கள் திறனை மேம்படுத்தும் பயிற்சிக்காக, சென்னையில் பயிற்சி மையம் ஏற்படுத்த உள்ளோம். அங்கு பல்வேறு வகை கண்டுபிடிப்பு, தேவையான பயிற்சிகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், மனநலம் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 98432-25300 செல் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதையடுத்து மனநல மருத்துவர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று மருத்துவர்கள் மனநல பிரச்சனைக்கு தீர்வு சொல்வார்கள்.

இன்னும் சில நாளில், மிக்ஜாம் புயல், மழை, வெள்ளத்தால் பாதித்த சென்னையில் உள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுத்தல், சிகிச்சை மருத்துவக் குழுவுடன் நல ஆலோசனைகள் வழங்க திட்டமிட்டு வருகிறோம். மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அகில இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையில் சார்பில் அரசுடன் இணைந்து 3 ஆயிரம் மருத்துவர்கள் நோய் தொற்று ஏற்படாத வகையில், மருத்துவ பணியை மேற்கொள்ள உள்ளோம்.

மருத்துவர்களுக்காக பல்வேறு தொழில்நுட்ப குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் சென்னையில் ஐஎம்ஏ திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற அடிப்படையில் வருடம் முழுவதும் இயங்க கூடிய வகையில் மையம் ஏற்படுத்தப்படும். 2வது நாளாக நாளை மாலை நடைபெற உள்ள மாநாட்டில் தேசிய தலைவர்கள் சரத்குமார் அகர்வால், டாக்டர் ஆர்.வி அசோகன், டாக்டர் ரவி வாங்கர், டாக்டர் அருள்ராஜ், டாக்டர் விஜயகுமார், டாக்டர் ஜெயலால்,டாக்டர் ஏ.கே ரவிக்குமார், டாக்டர் அன்பு ராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர், இந்நிகழ்வில், தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி, டாக்டர் மதிவேந்தன், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுங்காரா, ஈரோடு கிழக்கு சட்டமன்ற எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளனர் என டாக்டர் அபுல்ஹசன் தெரிவித்துள்ளார். 

இம்மருத்துவ மாநாட்டிற்கான ஏற்பாடுகளை, ஐ.எம்.ஏ தேசிய துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, ஐ.எம்.ஏ தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் செந்தமிழன், டாக்டர் தியாகராஜன், நிதிச் செயலாளர் டாக்டர் அழகு வெங்கடேசன், டாக்டர் கார்த்திக் பிரபு, டாக்டர் கௌரிசங்கர், டாக்டர் செந்தில் வேல், டாக்டர் பார்த்திபன், டாக்டர் அரவிந்த் குமார், டாக்டர் சாபிரா அபுல் ஹாசன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: