திங்கள், 25 டிசம்பர், 2023

காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த அமைச்சர்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, தண்ணீரை திறந்து வைத்து, மலர்தூவி வரவேற்றார்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பழைய பாசன பகுதிகளான காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு அணையில் உள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாசனத்திற்காக டிசம்பர் 25 (இன்று) முதல் ஏப்ரல் 23 வரை 120 நாட்களுக்கு 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். மேலும், 25.12.2023 முதல் 23.04.2024 வரை 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதமும், அடுத்த 60 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 450 கன அடி வீதமும் மற்றும் மீதமுள்ள 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் ஆக மொத்தம் 120 நாட்களுக்கு இரண்டாம் பருவ பாசனத்திற்கு 4017.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தற்போதைய நீர் இருப்பு மற்றும் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடப்படும். எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் பழனிசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரகாஷ், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் தினகரன், செந்தில்குமார் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: