செவ்வாய், 5 டிசம்பர், 2023

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து விவசாயிகள் மனு

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து விவசாயிகள் மனு அளித்தனர்.
கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பெரியசாமி தலைமையில் மனு வழங்கினர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கீழ்பவானி பாசனமானது 2.07 லட்சம் ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களை கொண்டதாகும், இந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 1.35 லட்சம் ஏக்கருக்கு ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான காலத்தில் ஒரு மண்டலத்திற்கு நன்செய் பயிருக்கு 120 நாட்களாகும்.

அடுத்த மண்டலத்திற்கு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான 120 நாட்களில் இடைநிறுத்தம் செய்யப்பட்டு, 80 நாட்களுக்கு 1.35 லட்சம் ஏக்கருக்கு புன்செய் கடலை பயிருக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாசன அமைப்பை காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் சிறப்பானது என பாராட்டி வரவேற்றதுடன், இந்த இரண்டு மண்டலங்களில் நடைபெறும் பாசனத்திற்கு நன்செய் பயிருக்கு 19 டிஎம்சி தண்ணீரும், புன்செய் பயிருக்கு 9 டிஎம்சி தண்ணீரும் ஆக 28 டி எம் சி தண்ணீர் வழங்கி ஆணையிட்டுள்ளது.

ஆனால் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, கீழ்பவானி பாசனத்தில் ஒரு மண்டலம் மட்டுமே நன்செய் பயிருக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது. இன்னொரு மண்டலத்திற்கு புன்செய் கடலை பயிருக்கு ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டிய தேவை உள்ளது, தற்போது அணையில் இருப்பில் உள்ள தண்ணீர் கீழ்பவானி பாசனத்தில் பாசனம் பெறாமல் உள்ள 1.35 லட்சம் ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களுக்கு கொடுக்கப்பட வேண்டியதாகும்.  

கீழ்பவானி அணையில் உள்ள, கீழ்பவானி ஆயக்கட்டு நிலங்களுக்கு புன்செய் பாசனத்திற்கு சொந்தமான தண்ணீரை தவறான நடைமுறையின் காரணமாக 3 - 12 - 2023 முதல் தடப்பள்ளி - அரக்கன் கோட்டை கால்வாயில் 7.7 டி எம் சி தண்ணீர் 120 நாட்களுக்கு கொடுக்கப்படும் என அரசு ஆணையிட்டு திறக்கப்பட்டுள்ளது. அடுத்து காளிங்கராயன் பாசனத்திற்கும் இதை போல் வழங்கப்படும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது . 

இதன் மூலம், கீழ்பவானி பாசனத்தில் 1.37 லட்சம் ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களின் பாசன உரிமை அடியோடு பறிக்கப்பட்டுள்ளது என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எனவே, தாங்கள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு கீழ்பவானி பாசனத்திற்கு காவிரி நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி தண்ணீர் பங்கீடு செய்து ஆணையிடும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: