புதன், 10 ஜனவரி, 2024

சிப்காட் தொழிற்சாலைகளால் மக்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க உறுதிமொழிக் குழு பரிந்துரை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் சேலம் மேற்கு இரா.அருள், நாங்குநேரி ரூபி.ஆர்.மனோகரன், அண்ணா நகர் எம்.கே.மோகன், நாமக்கல் பெ.ராமலிங்கம், ஆம்பூர் அ.செ.விஸ்வநாதன், பெருந்துறை எஸ்.ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின், தலைவர் தி.வேல்முருகன், நிருபர்களிடம் கூறியதாவது, ஈரோடு புதிய பஸ் ஸ்டாண்ட், 63 கோடி ரூபாயில் கட்டும் பணி, ஆவின் கால்நடை தீவன ஆலையில் கூடுதல் குடோன் உட்பட பல பணிகளை நேரில் ஆய்வு செய்தோம்.
இப்பகுதி விவசாயிகள், ஆலை தரப்பினர், தொழிற்சங்கத்தினர் கோரிக்கை குறித்த மனுக்களை வழங்கினர்.

சிப்காட்டில் தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்தோம். நேர்மையான ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையிலான குழுவை அமைத்து, எந்த ஆலையில் இருந்து இதுபோன்ற கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது, என்பதை ஆய்வு செய்ய கலெக்டருக்கு இக்குழு பரிந்துரைக்கிறது, தொழிற்சாலை கழிவு நீர் எந்தெந்த பகுதிக்கு செல்கிறது. ஓடை, குளங்களில் எவ்வாறு சென்றடைகிறது. என்ன பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என ஆய்வு செய்ய கேட்டு கொண்டுள்ளோம்.
நாங்கள் குழு அமைக்க பரிந்துரைக்கும் முன்பே, இம்மாவட்ட கலெக்டர் சில குழுவை அமைத்து, சில நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய துறைக்கு பரிந்துரைத்துள்ளார். சில நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளார்.
இருந்தாலும், நொய்யலாறு பாழாகி உள்ளது. இப்பகுதியிலும் டி.டி.எஸ்., 7,000 முதல், 15,000 வரை இருப்பதை நாங்கள் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தாமல் தவிர்க்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களை கேட்டு கொண்டுள்ளோம்.
மக்களுக்கு கேன்சர், மலட்டுத்தன்மை போன்ற நோய் ஏற்படுவதை மக்கள் பிரதிநிதிகள் உறுதி செய்கின்றனர். இவற்றை முறைப்படுத்த, குறைக்க சிப்காட் நிர்வாகத்துக்கும், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் இக்குழு அறிவுரை வழங்கி உள்ளது.
தேவைப்பட்டால் இக்குழுவினர், மாசுகட்டுப்பாட்டு வாரிய செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து உரிய பரிந்துரை வழங்குவோம்.
அனைத்து தரப்பினரும், ‘மாசு இல்லாத ஈரோடு மாவட்டத்தை ஏற்படுத்துங்கள். தொடர்ந்து தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டு கொண்டுள்ளனர். சிப்காட் நிர்வாக இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடம் இதுபற்றி பேசுவோம்.
தவிர, அரசு சார்பில், 40 கோடி ரூபாயில் சிப்காட்டில் அமையும் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரைவுபடுத்த கேட்டுள்ளோம்.

பெருந்துறை மருத்துவ கல்லுாரி டீன், சுகாதாரத்துறை துணை இயக்குனர், சென்னை ரிசர்ச் இன்ஸ்டிடியூட் உள்ளடக்கிய குழுவினர், சிப்காட் ஆலைக்கழிவால் இப்பகுதியில் கண் எரிச்சல், கர்ப்பப்பை பிரச்னை, மலட்டுத்தன்மை, கேன்சர், மாதவிடாய் தள்ளிப்போவது, வாந்தி, மயக்கம், தோல் நோய் பிரச்னை உள்ளதா, என்பதை, 3 மாதத்துக்குள் எங்கள் குழுவுக்கு அறிக்கை வழங்க கேட்டு கொண்டுள்ளோம்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி முன்பு, போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டது. தற்போது அரசு எடுத்து செயல்படுத்துவதால், பிற மருத்துவ கல்லுாரியில் உள்ள வசதிகளை ஏற்படுத்த அத்துறையை கேட்டு கொண்டுள்ளோம். தவிர, அங்கு நரம்பியல் மருத்துவர், கார்டியாலஜி மருத்துவர், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான முதுகலை மருத்துவர்களை நியமிக்க கேட்டுள்ளோம்.

பெருந்துறையில் தாட்கோ மூலம், 16 கோடி ரூபாயில், 200 கட்டடம் கட்டி உள்ளனர். அக்கட்டடம் தரமாக உள்ளது. எங்கள் ஆய்வு பற்றி, அத்துறை இயக்குனருக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் அக்கட்டடங்களை ஆதிதிராவிட மக்களுக்கான வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளனர். தவிர இக்கட்டடம் தொடர்பாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதால், அதனையும் முடிவுக்கு கொண்டு வர முயல்வதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி, தாட்கோ மேலாண்மை இயக்குனர், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரிடமும் பேசி, நடவடிக்கைக்கு பரிந்துரைப்போம்,

பெரியார் பல்கலை கழக துணை வேந்தர் நடவடிக்கை, தமிழக அரசின் சட்டதிட்டங்களுக்கு எதிரானது. அவரது தொடர் நடவடிக்கை ஏற்புடையதல்ல. தமிழக அரசு தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இந்த துணை வேந்தர் சட்டத்தையும், மானியக்குழு பரிந்துரையையும், உயர்கல்வி துறை அமைச்சர், செயலர் உத்தரவை மதிக்கவில்லை. அதுபோன்ற ஒரு மனநிலையில் உள்ளவர்கள், மீண்டும் வரக்கூடாது. இச்சூழலில், அந்த துணை வேந்தர் ஒரே நாளில் பெயில் வாங்கி வருகிறார் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சாமானியனுக்கு இந்த நிலை கிடைக்காது.
கவர்னரின் சட்போர்ட் இருப்பதால்தான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் கேட்காமல், அரசு உத்தரவை மதிக்காமல் செயல்பட்டார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை, எவ்வித நிதி நெருக்கடி இருந்தாலும், அவர்களுக்கு நிறைவேற்றித்தர வேண்டும்.

பூரண மதுவிலக்கு வேண்டும் என்பது எங்கள் நோக்கம். அதற்காக டாஸ்மாக் கடைகளை அடித்து, குண்டாஸ் கைது நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளோம்.
வர்தா, தானே புயல் என எந்த இயற்கை சீற்றத்துக்கும் தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்க தக்கது. அதுபோன்ற ஒருவர் மீண்டும் பிரதமராக வரக்கூடாது.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும். தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்தந்த ஜாதி வாரியாக கணக்கெடுப்பின்படி சமூக நீதி வழங்க வேண்டும்.
தற்போதைய நிலையில் நாங்கள் தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம் என கூறினார்.

ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், எஸ்.பி., ஜவகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: