செவ்வாய், 2 ஜனவரி, 2024

போக்குவரத்து துறையில் ஓட்டுனர், நடத்துனர் பணி சுமையை தவிர்க்க உடனடியாக ஆட்சேர்ப்பு அவசியம்: கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல்

ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி பேசும்போது, அதிமுக ஆட்சியின் போது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது, 4 ஆண்டுகளாகியும் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில், 8 மணி நேரத்துக்குப் பதிலாக 18 மணி நேரம் ஓட்டுநர்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 73 கோரிக்கைகளில் 52 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகுதான் ஊதியப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இப்போது ஊதிய பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையால் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் மட்டும் 2 ஷிப்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் திமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒரு ஷிப்டில் மட்டுமே பணிபுரிகின்றனர். அதிமுக ஆட்சியில் 35000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், தற்போது பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. புதிய டயர்கள் மற்றும் உதிரிபாகங்கள் வழங்கப்படவில்லை. ஒரு வழித்தடத்தில் 8 பேருந்துகள் இயக்கப்பட்டதில், 4 பேருந்துகள் மட்டும் இப்போது இயக்கப்படுகிறது. அதனால், மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். டீசல் கி.மீ., விகிதம் விதிமுறை 4.5 ஆகும். ஆனால் ஓட்டுநர்கள் 6.5 உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தீபாவளியின் போது, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், ஓய்வு பெற்ற ஊழியர்களை பயன்படுத்தி பஸ்களை இயக்கினர். பழைய பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய பேருந்துகளாக இயக்கப்பட்டன. பல பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளன. நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் பல வழிகளில் துன்புறுத்தப் படுகின்றனர். சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். 95,000 ஊழியர்களுக்கு டிஏ வழங்கப்படவில்லை. 16000 ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் எதுவும் வழங்கப்படவில்லை. கழகம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் கழகத்துக்கு 2000 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்க வேண்டும்.

தற்போது, ஜனவரி 3ல், தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளன. எனவே, தொழிலாளர் நலனுக்காக, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா திமுக செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வகுமார சின்னையன், ஈரோடு மாநகர் பெரியார் நகர் பகுதி செயலாளர் இரா.மனோகரன், சென்னிமலை ஒன்றிய செயலாளர் ஏ.கே.பழனிசாமி, மாநகர மாவட்ட துணை செயலாளர் ஜெயலட்சுமி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: