புதன், 7 பிப்ரவரி, 2024

ஈரோடு மாவட்டத்தில் 9ம் தேதி குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தின முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. உலக மக்கள் தொகையில் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று 24 சதவீதமும் அதில் 25 சதவீதம் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குடற்புழு தொற்று பரவல் 25 சதவீதமாகவும் உள்ளது. குடற் புழு வகைகளாக உருண்டைப்புழு, கொக்கிப்புழு, சாட்டைப்புழு போன்றவை அறியப்படுகிறது.

குடற்புழு தொற்றால் பொதுவாக அறிகுறிகள் இருக்காது. ஆனால் கடுமையாக தொற்று ஏற்பட்டு இருப்பின் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த குடற்புழுக்கள் குடலில் இருந்து கொண்டு சாப்பிடுகின்ற உணவில் உள்ள இரும்புசத்து, ஊட்டச்சத்து, வைட்டமின் போன்ற சத்துக்களை எடுத்துக் கொண்டு வளர்கிறது. ஆகவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு, இரத்த சோகை நோய், ஊட்டச்சத்து, விட்டமின் ஏ சத்து மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் நோக்கமாக தேசிய குடற் புழு நீக்க தினம் வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. இதனை ஒட்டி நடைபெறுகின்ற குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்களில் குடற்புழுவை அழிக்கும் பொருட்டு, அல்பெண்டாசோல் மாத்திரைகள் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அளவிலும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லி கிராம் அளவிலும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு 400 மில்லி கிராம் அளவில் ஒரே தவணையில் வழங்கப்படுகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் 2080 அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும். 311 துணை சுகாதார நிலையங்களிலும், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் மொத்தமாக 7,25,893 பயனாளிகளுக்கு 2,112 பணியாளர்களைக் கொண்டு தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.

குடற்புழு தொற்றை தடுத்திட திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது. கழிவறையை பயன்படுத்துவது, வெளியில் செல்லும் போது காலணிகளை அணிந்து செல்வது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, காய்கறி பழங்களை நன்றாக கழுவிய பின் உட்கொள்வது, சுகாதாரமான குடிநீர், உணவை உட்கொள்வது, உணவுக்கு முன், கழிவறைக்கு சென்று விட்டு வந்த பின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற முறைகளை மேற்கொள்வது நல்லது.

மேலும், நடைபெற உள்ள குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம்கள் தங்கள் பகுதிக்கு அருகில் நடைபெறும் இடங்களில் தங்கள் குழந்தைகளுக்கும் மாணவ, மாணவியர்களுக்கும். 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களும் அல்பெண்டாசோல் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: