வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்: ஈரோட்டில் விக்கிரமராஜா பேட்டி

இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட் என்று ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழ் பெயர் பலகை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோட்டில் தொடங்கி இருக்கும் இந்த விழிப்புணர்வு பேரணி மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக பேரணிகள் நடத்தி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மீதும் தமிழ் பெயர் வைக்க வலியுறுத்துவோம். 60 சதவீதம் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என வணிகர்களிடம் கூறி உள்ளோம்.இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது.

வணிகர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கேட்டிருந்தோம். அது குறித்து எதுவும் இல்லை. ஜிஎஸ்டி வரி விலக்கில் மாற்றங்கள் கேட்டிருந்தோம். ஒரே முறை வரியாக கேட்டிருந்தோம். வரியை குறைத்தால் வரி ஏய்ப்பு இருக்காது என்பதையும் வலியுறுத்தி இருந்தோம். ஜிஎஸ்டி சட்ட ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்த்து ஜிஎஸ்டி சட்டத்தை தெரிந்து கொள்வதாக இருக்கிறது. இதனை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். காலாவதியான சுங்கச்சாவடிகளை 6 மாத காலத்தில் அகற்றுவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக துறையின் அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். ஆனால் இன்னும் எதுவும் அகற்றப்படவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

சாலைகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று எதுவும் செய்யாத பட்ஜெட்டாக இருக்கிறது. சோலார் பயன்படுத்துபவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் தருவதையும் ஒரு லட்சம் கோடி வட்டி இல்லா கடன் தருவதையும் வரவேற்கிறோம். ஆனால் அது யாருக்கு தரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே வெள்ளத்தால் மழையால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

இந்தியாவில் வணிகவரி அதிகம் கட்டுவது தமிழ்நாட்டில் தான். இதில்சிறு சிறு குறைபாடுகளை கூட அதிகாரிகள் கையில் எடுத்துக்கொண்டு அபராதம் விதிக்கின்றனர். ஏற்கனவே நசிந்து வரும் தொழிலை மேலும் நசுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். காப்பீட்டு நிறுவனங்கள் பல தனியார் நிறுவனங்கள் சரியாக இழப்பீடு தருவதில்லை. அவற்றின் முகத்திரையை கிழிக்க போகின்றோம். இழப்பீடு பெரும் பொழுது காப்பீடு இல்லை என தவறான வழிகாட்டுதல்களை தெரிவிகின்றனர். தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை விரைவில் அதன் உண்மை தன்மையை அம்பலப்படுத்துவோம்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். வணிகர் சங்க மாநில மாநாட்டில் பல்வேறு பிரகடன தீர்மானத்தை வெளியிட இருக்கின்றோம். இந்த ஆண்டு சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மேயர் நாகரத்தினம், இளைஞரணி மாவட்ட தலைவர் நெல்லை ராஜா, பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் செல்வன், இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ்,  மாவட்ட இளைஞரணி பொருளாளர் சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், தமிழரசன், பகுதி பொறுப்பாளர்கள் ஜியாவுதீன், கார்த்தி, சரவணன், பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: