ஞாயிறு, 17 மார்ச், 2024

ஈரோட்டில் ஆவணங்கள் இருந்தும் அதிகாரிகளின் அடாவடியால் வெளி மாநில தம்பதி அவதி

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனைகள் செய்து ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்பவர்களிடம் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஜவுளி உற்பத்திக்கும் விற்பனைக்கும் புகழ்பெற்ற ஈரோட்டிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து தனிநபர்களும் பல்வேறு தரப்பட்ட மக்களும் வந்து ஜவுளி துணிகளை கொள்முதல் செய்து செல்வது வழக்கம் .

அந்த வகையில் நேற்று (சனிக்கிழமை) இரவு கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியைச் சேர்ந்தவர் விஜயேந்திர ராவ். இவர் கர்நாடகா பத்திரிக்கையில் செய்தியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யாவதி. தம்பதி இருவரும் தங்களது மகன் திருமணத்திற்கு புடவைகள் ஈரோடு வாங்க வந்துள்ளனர்.

நேற்றிரவு 89 சேலைகளை மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்துவிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஈரோடு ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது பறக்கும் படை அதிகாரிகள் அவர்கள் சென்ற ஆம்னி காரில் இருந்து 89 சேலைகளை பறிமுதல் செய்ததோடு அவர்கள் கையில் வைத்திருந்த சுமார் 45 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். 

அவற்றை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கொண்டு வந்து ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படை அதிகாரியான ராகுல் தனது பணி நேரம் முடிந்து விட்டது என்று புறப்பட்டு சென்றுவிட தம்பதியினர் இருவரும் குடிப்பதற்கு தண்ணீர் கூட வாங்க இயலாமல், உணவு சாப்பிட கையில் பணம் ஏதும் இல்லாமல் தவித்து வந்தனர். 

இதுகுறித்து மாவட்ட காவல்துறையினருக்கு அங்கு இருந்த செய்தியாளர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜவஹர் சம்பந்தப்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடகாவில் இருந்து வந்திருந்த தம்பதியினர் தங்களது மகன் திருமண அழைப்பிதழ், சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகள், பணம் கொண்டுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் கையில் வைத்திருந்தும் அதிகாரிகளின் அடாவடி நடவடிக்கையால் வெளி மாநில தம்பதிகள் மொழி தெரியாமல் ஈரோட்டில் தவித்து வரும் சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: