வியாழன், 14 மார்ச், 2024

அரசு விழாவில் முதல்வர் அநாகரீகமாக பேசவில்லை. அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பேசி உள்ளார்: அமைச்சர் விளக்கம்

அரசு விழாவில் முதல்வர் மத்திய அரசு பள்ளி அநாகரீகமாக பேசவில்லை. அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பேசி உள்ளார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை தமிழ்நாடு வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர், வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, நிருபர்களிடம் கூறுகையில்...

ஈரோடு மாவட்டத்துக்கு, 110 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் நடந்த விழாவில் முதல்வர் அறிவித்துள்ளார். விரைவில் இப்பணிகள் துவங்கும்.
நகரப்பகுதியில் உள்ள பஸ்களில் மட்டும், பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். மலைப்பகுதியில் உள்ள பெண்களுக்கும் இந்த வசதியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். உடனடியாக அதனை ஏற்று, செயல்படுத்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

அரசு விழாவில் அநாகரீகமாக முதல்வர் பேசுவதாக, வானதி சீனிவாசன் கூறுகிறார். அரசு விழாவில் அவ்வாறு முதல்வர் பேசவில்லை. அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பேசி உள்ளார். சென்னை, தென் மாவட்டங்களில் அவ்வளவு பெரிய புயல், மழை, வெள்ளம் வந்தது. அதற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை. இதை அரசு விழாவில் கேட்காமல் எங்கு பேசுவது. இழப்பை சரி செய்ய, தமிழக அரசுதான் செலவிட்டு வருகிறது.
ஈரோடு சி.என்.கல்லுாரியை, அரசு ஏற்றுள்ளது. நிர்வாக பொறுப்பை முழுமையாக ஏற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதை அரசே முழுமையாக ஏற்று கொண்டால், புதிய கட்டடம் கட்டுதல், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதலை அரசே செயல்படுத்தும்.
அங்கு, 52 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு விளையாட்டு அரங்கம் உட்பட சில செயல்பாட்டுக்கான திட்டத்தை இயற்றி, கவர்னருக்கு அனுப்பி, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்காமல், 2 ஆண்டாக நிலுவையில் உள்ளது. அவர்களது உத்தரவு வந்தால், இக்கல்லுாரி அரசு கைக்கு வரும். அங்கு ஐ.ஏ.எஸ்., அகாடமி, விளையாட்டு அரங்கம் உட்பட வளர்ச்சி பணி செய்யலாம்.
டாஸ்மாக்கின், 500 கடைகளை மூட வேண்டும் என மக்கள் கூறியதால் மூடப்பட்டது. இதை அரசியல் ரீதியாக பேச பல வழிகள் உள்ளது. இக்கடைகள் மூடினால், அங்கு மது வாங்கியவர்கள் எங்கு செல்கிறார்கள் என பார்க்க வேண்டி உள்ளது. மது குடிப்பதை விட்டாலும், பக்கத்து கடைக்கு சென்றாலும் சரி எனலாம். அதைவிடுத்து, வேறு எங்காவது தவறாக குடிக்கும் இடத்தை தேடி விடக்கூடாது என்பதையும் பார்க்க வேண்டி உள்ளது.

டாஸ்மாக் கடை மூடிய இடங்களில் ‘எப்.எல்.2’ கடை திறப்பதாக கூறுவது தவறு. யார் வேண்டுமானாலும் கேட்டு, ‘எப்.எல்.2’ கடைக்கான அனுமதி பெற முடியாது. அவ்விட சூழல், குடியிருப்பு, வசதிகளை ஆய்வு செய்து அனுமதி தரப்படும். 100க்கணக்கில் அனுமதி தரவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது.
மூடிய கடையில் பார் எடுத்தவர்கள் கூட, இதுபோன்று தவறான கருத்தை கூறுவார்கள்.
கட்டடங்களில், 2,400 சதுரடிக்கு கீழ் இருந்தால், பிளானிங் அனுமதிக்கு செல்ல வேண்டாம். அதற்கு பணம் செலுத்த வேண்டும். நாமே, சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு, பொறியாளரே பிளானை போட்டு, அவரே சான்று வழங்கி, பணத்தை செலுத்தி அனுமதி பெற்று செல்லலாம். துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சான்றிதழ் தர வேண்டும் என்றில்லை.
இதனால் சட்டத்துக்கு புறம்பாக கட்டடங்கள் கட்ட அவசியமில்லை.
பெரிய கட்டடங்கள் கட்டும்போது அனுமதி பெற்று கட்டி, கட்டி முடித்த பின் ‘கம்ப்ளிஷன் சர்டிபிகேட்’ வாங்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதிப்படி உள்ளதா என பார்ப்பார்கள்.
சிறிய கட்டடங்களுக்கு, 750 சதுரடிக்குள், பொறியாளரே சான்று வழங்கி முறையாக கட்டிவிடலாம். பொறியாளர் சான்றுப்படி இல்லாவிட்டால், ஆய்வின் போது தெரியவந்தால், அக்கட்டடத்தை பூட்ட அனுமதி உண்டு.
ஈரோடு, சோலாரில் அமைய உள்ள காய்கறி மார்க்கெட், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் அனைத்து வசதிகளுடன், நவீனமாக அமைக்கப்படும், அதேநேரம், டவுனுக்குள் சில்லறை காய்கறி விற்பனைக்கு ஒரு இடம் தேர்வு செய்து அமைக்கவும் முயற்சி நடக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக்கில் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை செயல்படுத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அது மிகப்பெரிய செயல்பாடு. தற்போது, 4 மாவட்டங்களில் உள்ள சில குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளில் மட்டும், டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்தி உள்ளோம். அதன் செயல்பாட்டை ஆய்வு செய்கிறோம்.
பிற மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபானங்களை கணக்கிட வேண்டும். அவற்றில் குறிப்பிட்ட லேபிள், ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். அப்போதுதான், டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். எனவே, விரைவில் பிற மாவட்டங்களிலும் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை அமலுக்கு வரும் என கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: