திங்கள், 8 ஏப்ரல், 2024

ஈரோடு: கடம்பூர் அருகே அகழியில் தவறி விழுந்த பெண் யானைக்கு சிகிச்சை

கடம்பூர் அருகே அகழியில் தவறி விழுந்த பெண் யானையை வனத்துறையினர் மீட்டு பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகேயுள்ள குரும்பூர் மொசல்மடுவு என்னும் இடத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 25 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல் மெலிந்த நிலையில் தள்ளாடியபடி தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்தது. தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு அருகே புறம்போக்கு இடத்திற்கு அந்த யானை வந்த போது, ஏற்கனவே பலவீனமான இருந்ததால், அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் அந்தப் பெண் யானை தவறி கீழே விழுந்து உயிருக்கு போராடியது.


இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதையடுத்து வனத்துறையினர், வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளமான பகுதியில் சோர்வடைந்த நிலையில் படுத்திருந்த யானைக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டு தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

முன்னதாக, பள்ளமான பகுதியில் யானை படுத்து கிடந்ததால், யானை மேலே வர பள்ளமான பகுதியில் வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண் கொட்டப்பட்டு சமதளம் செய்தனர். மேலும், கடுமையான வெயில் காரணமாக யானையின் நிழலுக்காக பந்தல் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பெண் யானைக்கு வேறு எந்த வித காயமும் இல்லை எனவும், சிறிது நேரம் ஓய்வுக்கு பிறகு யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவோம் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாகவும் யானைக்கு உடல்நலம் குன்றியிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தற்போது வனப்பகுதியில் நிலவும் வறட்சியான நிலை உள்ளதால் தன்னார்வலர்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: