வெள்ளி, 5 ஏப்ரல், 2024

அதிமுகவின் அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேறியது: இபிஎஸ்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆவரங்காட்டூர் பிரிவில் இன்று (5ம் தேதி) மாலையில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவை வீழ்த்த திமுக பல்வேறு அவதாரங்களை எடுத்தது. அதிமுகவை அழிக்க மு.க.ஸ்டாலினின் எடுத்த திட்டங்கள் தூள், தூளாக்கப்பட்டன. அதிமுக தலைவர்கள் மக்களுக்காக பாடுபடுவர்கள்; வேறு சிலர் குடும்பத்திற்காக பாடுபடுகின்றனர். அதிமுகவுக்கு யார் துரோகம் செய்தாலும், அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும். அதிமுகவை முடக்க நினைத்த திமுகவின் திட்டங்கள் தவிடு பொடியாக்கப்பட்டன.

3 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு திமுக என்ன செய்தது.?. தமிழகத்தில் மற்ற தொகுதிகளை விட ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை நன்கு அறிவேன். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஏரி, குளம், குட்டைகள் முழுமையாக தூர்வாரப்பட்டன.

அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு ரூ.1,652 கோடி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு நீர் சேமிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. எவ்வளவு தொழிற்சாலைகள் இருந்தாலும், உணவு கொடுப்பவர் விவசாயி தான்.

விவசாயிகளை திமுக அரசு புறக்கணிக்கிறது. விவசாயிகளை காக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். திமுக எம்பிக்கள் தமிழக மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை. அதிமுகவின் அழுத்தத்தால் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கான நீரை கர்நாடகாவிடம் பேசி பெற வேண்டும். இந்தியா கூட்டணி கூட்டத்தில், கர்நாடகாவிடம் பேசி தண்ணீரை பெற முயற்சிக்காதது ஏன்?.

10 சதவீத வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக அழுத்தம் கொடுத்ததால் தான், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதிமுக ஆட்சியில் நீரை சேமிக்க பல தடுப்பணைகள் கட்டப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசாமி, காளியப்பன், சத்தியபாமா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமணீதரன், பொன்னுசாமி, ராஜா, ஈஸ்வரன், சரஸ்வதி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: