செவ்வாய், 2 ஏப்ரல், 2024

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி

நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு இந்த விழிப்புணர்வு வாகன பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நடைபெற இருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 2024-ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதி செய்யும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்திடும் வகையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.

இவ்விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கப்பட்டு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா வரை சென்றடைந்தது. இப்பேரணியில் வாழ்வுரிமையை காக்க வாக்களிப்போம், ஜனநாயக ஆட்சியை நிலை நிறுத்த வாக்களிப்போம், நமது வாக்கு நமது உரிமை, நல் வாக்களிப்போம் அதனை நல்ல ஆட்சியாளர்களுக்காக வாக்களிப்போம், அச்சமின்றி உற்சாகமாக வாக்களிப்போம், உங்கள் வாக்கு உங்கள் குரல், வாக்களிப்பது கடமை அதுவே நமது உரிமை, ஒரு விரல் புரட்சியே நாட்டின் தலையெழுத்தை மாற்றும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நடமாடும் வாகனத்தில், அச்சடித்து ஒட்டப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்டு, அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியரும்(வளர்ச்சி), ஸ்வீப் கண்காணிப்பு அலுவலருமான மணிஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய்குமார் மீனா, வட்டாட்சியர் (தேர்தல் விழிப்புணர்வு) ரவிசங்கர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) வசந்தராமகுமார், தேர்தல் விழிப்புணர்வு உதவி தொடர்பு அலுவலர் கீதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: