புதன், 24 ஏப்ரல், 2024

கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்ப அலைகளினால் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக நமது ஈரோடு மாவட்டத்தில் வெப்ப நிலையின் அளவு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் முதலிடமும் வகிக்கிறது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற சூழல் வெப்பநிலை அதிகமாகும் போது அதிகமான வியர்வை வழியாக உப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுகிறது.

கோடை வெப்ப தாக்கத்தினால் அதிக தாகம், தலைசுற்றல், கடுமையான தலைவலி, தசைப் பிடிப்பு. உடல் சோர்வடைதல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் குறைந்த அளவு வெளியேறுதல், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். வெப்பத் தாக்க அதிர்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்ப தாக்க அதிர்ச்சியானது பச்சிளம் குழந்தைகள், சிறுவர் சிறுமியர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் இணை நோய் உள்ளவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

கோடை வெப்ப தாக்க பாதிப்புகளை தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்கவும். நடமாட வேண்டிய கட்டாயம் ஏற்படின் குடையைக் கொண்டு அல்லது தலையில் துண்டை கட்டிக்கொண்டோ நடமாடவும். வெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், உப்பு கலந்த மோர், உப்பு மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறுகள், ORS சர்க்கரை உப்பு கரைசல் திரவம் ஆகியவற்றை பருகலாம். தாகம் இல்லாவிடினும் தண்ணீரை அதிகமாக பருக வேண்டும். மேலும் பருவ கால பழங்களான தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி, நுங்கு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். புகைபிடித்தல், மது, செயற்கை பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மெலிந்த வெளிர் நிறமுள்ள தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். வெயில் படும் ஜன்னல்களில் திரைச்சீலைகளை கட்டுவதன் மூலம் அறையின் வெப்பத்தை குறைக்கலாம். சாலையில் நடந்து செல்லும் பொழுது வெப்ப தாக்க அதிர்ச்சி ஏற்பட்டவர்க்கு முதலுதவி சிகிச்சையாக அந்த நபரை குளிர்ந்த காற்றோட்டமான நிழலான பகுதியில் ஒரு பக்கமாக ஒருக்களித்து படுக்க வைக்க வேண்டும்.

பின்பு அவருக்கு குடிப்பதற்கு பழச்சாறு அல்லது ஓஆர்எஸ் திரவம் அல்லது தண்ணீரை கொடுக்க வேண்டும். அவர்கள் உடல் வெப்பத்தை குறைப்பதற்கு குனிந்த தண்ணீரால் உடல் முழுவதும் தெளித்து விட வேண்டும். அல்லது துணியை தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும் துடைத்து விட வேண்டும். பின்பு 108 அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்திடல் வேண்டும்.

கார்களை உபயோகிப்பவர்கள் தயவு செய்து உங்கள் குழந்தைகளையோ அல்லது செல்ல பிராணிகளையோ வெயிலில் காருக்குள் தனியாக வைத்திருக்க வேண்டாம். கடுமையான வெயிலில் உடல் வெப்பமடையும் பொழுது ஐஸ் வாட்டர் போன்ற மிக குளிர்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் பரவும் நோய்களான அம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் வெயில் கொப்பளங்களுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மேற்கண்ட கோடை வெயிலின் வெப்ப தாக்க பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: