திங்கள், 15 ஏப்ரல், 2024

மத்திய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறையை மீட்டெடுக்க நடவடிக்கை: ஈரோடு திமுக வேட்பாளர் உறுதி

ஈரோடு நாடாளுமன்றக் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம், தில்லைநகர், அக்ரஹாரம், பெரியார்நகர், ஆண்டிக்காடு, சுபாஸ்நகர், பழனியப்பாநகர், ஒட்டமெத்தை, உடையார்பேட்டை, நாராயணன்நகர், கொத்துக்காரன்காடு, வெடியரசன்பாளையம், ஆலாம்பாளையம், சின்னகவுண்டன்பாளையம், வெங்கடேசபுரம், எஸ்.பி.பி. காலனி, அன்னை சத்யா நகர், ஆயக்காட்டூர், கரட்டாங்காடு, வஉசி நகர், முனியப்பன்நகர், கொங்கு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது, சமையல் காஸ் விலையானது தற்போது இருப்பதை விட பாதியாக குறைக்கப்படும். மாணவர்கள் கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும், 10 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் ஜவுளித்துறை மிகவும் நலிவடைந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த ஜவுளித்தொழிலை விட்டு வெளியேறி மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகள், திட்டங்கள் தான் இதற்கு முக்கிய காரணம்.

எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் உடனடியாக நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டு மேம்படுத்தவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரயான், பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டன் மட்டும் ரூ.160 கோடி ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது. இதை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறிகள் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போல விவசாய நிலங்களை பாதிக்கும் உயர்மின் கோபுரங்கள், கெயில் மற்றும் பெட்ரோல் பைப் லைன் போன்ற திட்டங்களை விவசாய நிலங்களுக்கு பதிலாக சாலையோரங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு இத்திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும். ஏழைக்குடும்பங்களின் வறுமையை போக்கிட ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பதோடு விவசாய தொழிலாளர்கள் 100 நாள் திட்டமானது 150 நாட்களாகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும். இவ்வாறு கே.இ.பிரகாஷ் பேசினார்.

வாக்குசேகரிப்பின் போது மாநில சுற்றுசூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் மற்றும் கூட்டணி கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: