செவ்வாய், 21 மே, 2024

பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, சேலத்தில் இருந்து கொச்சின் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலையின் ஒரு புறத்தில் மழைநீர் ஆறாக ஓடியது.

இந்நிலையில், அவ்வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது, காரில் பயணித்தவர்கள் காரிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி, நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பின்னர், இதுகுறித்து பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை மீட்டனர். அதே நேரத்தில், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கானது, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக ஆறாக ஓடியதால், சாலையின் இருபுறம் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் விவசாய விளை நிலங்களுக்குள் மழை நீரானது புகுந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தேசிய சுங்கச் சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு காரணம், சுங்கச் சாலையின் மழைநீர் வடிகால்களை பல ஆண்டுகளாக பராமரிக்காமலும், முறையாக தூர்வாரப்படாமல் இருந்ததாலும், அதே நேரத்தில் சாலையை முறையாக பல இடங்களில் முறையாக போடப்படாமலும் இருப்பதால் தான். 

மேலும், தற்போது வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக வெள்ள நீரானது, சாலையில் ஆறாக ஓடியதுடன், சாலையின் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளது. சுங்க கட்டணம் வசூலிக்கும் ஐ.வி.ஆர்.சி எல் நிறுவனம் முறையாக சாலைகளை அமைத்து, சுங்கச்சாவடியை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்க முடியவில்லை என்றால் சுங்கச்சாவடியை மூடி விடலாம் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: