திங்கள், 27 மே, 2024

முன்விரோதத்தால் இளைஞர் குத்திக் கொலை: ஈரோட்டில் உறவினர்கள் சாலை மறியல்

முன்விரோதம் காரணமாக இளைஞரை குத்திக் கொலை செய்த குற்றவாளியை பிடிக்காத போலீசாரை கண்டித்து உறவினர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சோளங்காபாளையம் அருகே உள்ள கிளாம்பாடி, முனியப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 21). இவர், அவரது உறவினர் ஒருவரின் கட்டிடத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மது அருந்த திட்டமிட்ட ஹரிஷ், அவரது நண்பர் கௌதமுடன் இருசக்கர வாகனத்தில் சென்று மதுபானங்களை வாங்கிக்கொண்டு சாணார்மேடு சாலையில் வந்து கொண்டிருந்தார்.


அப்போது சாலையோரமாக நின்று கொண்டிருந்த வெள்ளியங்கிரி என்பவர் ஹரிஷின் வாகனத்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வெள்ளியங்கிரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஹரிஷின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹரிஷை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மலையம்பாளையம் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் ஹரிஷின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அப்போது, உடற்கூறு ஆய்வகத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுவதற்காக அணிவகுத்து வந்தபோது, மருத்துவமனை நுழையிலில் உள்ள கேட் பூட்டப்பட்டதை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள், போலீசாரின் எதிர்ப்பையும் மீறி கேட்டை வலுக்கட்டாயமாக திறந்து மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அப்போது, காதல் விவகாரத்தில் ஹரிஷிக்கும் - வெள்ளியங்கிரிக்கும் இடையே முன்பகை இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக ஏற்கெனவே மாரியம்மன் கோவில் திருவிழாவில் தகராறு நடைபெற்ற நிலையில், தற்போது கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பியோடிய வெள்ளியங்கிரி மட்டுமில்லாமல் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய வேண்டும் எனவும், முன்பகை குறித்து காவல்நிலையத்தில் முறையிட்ட போது, உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மலையம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திருஞானசம்பந்த்தை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், ஏடிஎஸ்பி ராஜா ரனவீர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: