சனி, 15 ஜூன், 2024

புற்றுநோயாளிகள் காப்பகங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படுத்த அரசை வலியுறுத்துவோம்: ஐஎம்ஏ தேசிய தலைவர் பேட்டி!!ஈரோட்டில் உள்ளது போல வேலூர், தஞ்சை, திருநெல்வேலியில் புற்றுநோயாளிகள் காப்பகம் ஏற்படுத்தப்படும்!!ஐ.எம்.ஏ. தேசியத் தலைவர் பேட்டி!!!பெருந்துறை, ஜூன். 15-ஈரோடு சித்தோடு அருகில் ஈரோடு மருத்துவர்களால் நடத்தப்படும் இமயம் புற்றுநோயாளிகள் காப்பகத்தை இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) தேசியத் தலைவர் டாக்டர் ஆர்.வி. அசோகன், ஐ.எம்.ஏ. தேசிய பொதுச் செயலாளரும் இமயம் பொருளாளருமான டாக்டர் சி.என்.ராஜா பார்வையிட்டனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டு தங்களது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் புற்றுநோயாளிகளுக்காக நடத்தப்படும் இந்த இமயம் புற்றுநோயாளிகள் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருவோரை பார்வையிட்ட பின் தேசியத் தலைவர் ஆர்.வி.அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு மருத்துவர்களால் நடத்தப்படும் ஈரோடு இமயம் புற்றுநோயாளிகள் காப்பகம் போன்று கோவா மாநிலத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களால் கைவிடப்பட்டு தங்கள் கடைசி காலத்தை கழித்து வரும் புற்றுநோயாளிகளுக்கான இந்த சேவை மகத்தானது. இது போன்ற புற்றுநோயாளிகள் காப்பகங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்று நடத்த வலியுறுத்துவோம். இருப்பினும் இதை அரசு மட்டுமே எடுத்து நடத்தி விட முடியாது அதற்கு டாக்டர்களின் பங்களிப்பும் தேவை. இந்திய மருத்துவ சங்கம் மூலம் கடந்த 50 ஆண்டுகளாக தானாக முன்வந்து ரத்ததானம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ரத்த வங்கிகளை உருவாக்கினோம். அகில இந்திய அளவில் எத்தனை ரத்த வங்கிகள் உள்ளது என்ற கணக்கு எங்களிடம் இல்லை. கேரளாவில் 7 ரத்த வங்கிகள் உள்ளன. கேரளாவின் தேவையில் 20 விழுக்காட்டை அது பூர்த்தி செய்கிறது. தமிழ்நாட்டில் 4 ரத்த வங்கிகள் உள்ளன. இந்திய மருத்துவ சங்கம் 1,850 கிளைகளைக் கொண்டது. சுமார் 600 கிளைகள் விழிப்புணர்வு மையங்களாகச் செயல்படுகிறது. அதுபோல மாவட்ட அளவில் கிளைகளின் மூலமாக அளவில் ஒவ்வொரு இடத்திலும் தேவைக்கேற்ப செயல்படுத்த முயற்சித்து வருகிறோம்.மருத்துவம் வணிகமயமாதல் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,1985 வரையிலும் சென்னை, கோவையில் இருந்த மருத்துவக் கல்லூரிகள் தான் சமூகத்தில் பெரிய மருத்துவமனைகளாக இருந்தன. இன்று கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருகிவிட்டன.லாபத்திற்காக பங்குதாரர்களைக் கொண்டு நடத்தப்படுவது அப்படித்தான் இருக்கும். அதை கொள்கை அளவில் தடுத்திருக்க வேண்டும். இந்தத் துறையில் லாபம் உண்டாக்கும் நிறுவனங்கள் வந்திருக்கக் கூடாது. அது தவறு. அதை 1985ல் தடுக்காமல் விட்டுவிட்டனர். அதுபோன்ற மருத்துவமனைகள் முதலில் சென்னையில் தான் வந்தது. தற்போது நாடு பூராவும் பரவியிருக்கிறது. தற்போது இதை மருத்துவமனையாக நடத்துவதா?, வியாபாரமாகப் பார்ப்பதா என அரசிற்கும் புரியவில்லை. 1993ல் நோயாளிகளை நுகர்வோர் என உச்சநீதிமன்றம் சொன்னது. அதிலிருந்து நோயாளிகள்- மருத்துவர் என்னும் உறவு, கடைக்காரர் - வாடிக்கையாளர் உறவைப்போல மாறி விட்டது. இன்று வரை அதிலிருந்து மீள முடியவில்லை. இப்போது அதை திரும்பவும் பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகு தான் மருத்துவமனைகள் தாக்குவது போன்ற வன்முறைகள் நிகழ்கிறது. இதைச் சட்டம் போட்டு மாற்ற முடியாது. பொது மக்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். அப்போது, தமிழ்நாடு மருத்துவ சங்க தலைவர் அபுல்ஹசன், இந்த வன்முறையைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டம் வகுத்துள்ளோம். ஒவ்வொரு கிளையிலும் மருத்துவர்கள் - குடிமக்கள், அப்பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவனங்களை இணைத்து பரஸ்பர புரிதலை உருவாக்கும் மிகப்பெரிய வேலையை செய்ய இந்திய மருத்துவ சங்கம் முடிவெடுத்துள்ளது. ஈரோட்டைப் போல வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதியில் புற்று நோய் காப்பகங்கள் ஏற்படுத்தப்படும் என்றார். நிகழ்ச்சியில் ஐ.எம்.ஏ. மாநிலத் தலைவர், இமயம் தலைவருமான டாக்டர் அபுல்ஹசன், முன்னாள் மாநில தலைவர் டாக்டர் சுகுமார், ஐ எம் ஏ மாநில பொதுச் செயலாளர் கார்த்திக் பிரபு, டாக்டர் சித்ரா தங்கவேல், மாவட்டச் செயலாளர் அரவிந்த்குமார், பொருளாளர் நந்தகுமார், ஐ எம் ஏ மாநில உதவி தலைவர் எம்.சந்திரசேகர், நிதி செயலாளர் கௌரி சங்கர், இமயம் காப்பக உதவி தலைவர் கண்ணம்மாள் துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காப்பாளர் மருத்துவர் வேலவன், அரவிந்த குமார், மேலாளர் சக்திவேல், முருகன், பூங்கொடி ஆகியோர் பாராட்டப்பட்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: