திங்கள், 10 ஜூன், 2024

நீட் தேர்வு தேவையா என்று மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய தமாகா இளைஞரணி கோரிக்கை

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகின. அந்த தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேசிய அளவில் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்திருப்பதும் இதில் 6 பேர் அடுத்தடுத்த வரிசை எண்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதும் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் சுமார் 1 லட்சம் மருத்துவ இடங்களுக்கு 13.16 லட்சம் பேரை தகுதி உள்ளவர்களாக அறிவித்ததன் நோக்கம் என்ன? நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. தற்போது தேர்வு முடிவுகளில் ஏற்பட்டிருக்கும் கருணை மதிப்பெண் குளறுபடிகளையும் சேர்த்து வைத்து பார்க்கும் போது நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி உறுதிசெய்யப்பட்டுளதாவே தெரிகிறது.

மனித தேவையில் மிக உன்னதமான பணிகளில் முன்னிலையில் இருப்பது மருத்துவ சேவை. உயிர் காக்கும் பணியான மருத்துவப் பணிக்கு தகுதியானவர்கள் வரவேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்த தகுதியை நிர்ணயம் செய்யும் தகுதித் தேர்வுகள் தகுதியாக நடத்தப்படுகிறதா? என்பது இப்பொழுது நாடு முழுவதும் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை முழுமையாக இல்லாமல் போகும் வகையில் சமீபத்தில் நடந்த நீட் தேர்வு குழப்ப நிலையிலேயே தொடர்கிறது. தேர்வு நடக்கும் போதே வட இந்திய பகுதிகளில் கேள்வித்தாள் வெளியானது முதல் தேர்வு முடிவுகள் வெளியானது வரை இந்த தேர்வு குறித்த சந்தேகங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வு தேவையில்லை என்பது எங்களது நிலைப்பாடு.

ஆனாலும் தகுதியான மாணவ மாணவியர்களுக்கு சரியான முறையில் அதிக பணம் செலவிடாமல் மருத்துவ படிப்பு இடங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலே நீட் தேர்வு புகுத்தப்பட்டது. ஆனால் அது சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை என்பது இதுவரை வெளிவந்த தகவல்கள் அதை உறுதி செய்கிறது. எனவே நீட் தேர்வு தேவையா? என்பதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தேவையானவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை என்று கூறுகின்ற மாநிலங்கள் அவரவர் விருப்பப்படி மாணவர்கள் சேர்க்கைகளை நடத்தவும் அதில் முறைகேடு இல்லாமல் தடுக்கவும் உரிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்க நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் ஆண்டுதோறும் நடைபெறும் குளறுபடிகளாலும், அத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் அடுத்தடுத்த தவறான நடவடிக்கையாலும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கொடுத்து ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்களை உருவாக்க வழிவகை செய்தார்கள்.

அதுபோல அந்தந்த மாநில அரசுகள் அவரவர் மாநிலங்களில் கல்விக் கொள்கைக்கு ஏற்ப இந்த திட்டங்களை வகுத்து மருத்துவ சேர்க்கை நடத்துவதற்கும் உரிய வழிமுறைகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும், வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து முறையான விசாரணை செய்து தவறிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், இந்த குளறுபடிகளால் மாணவர்கள் பாதிக்கப்படாத வண்ணம் தவறுகள் சரி செய்யப்பட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: