வியாழன், 25 ஜூலை, 2024

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி 70 சதவீதம் முடிவு: அமைச்சர் முத்துசாமி


கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி 70 சதவீதம் முடிவு: அமைச்சர் முத்துசாமி
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகள் ஏறத்தாழ 70 சதவீதம் முடிவடைந்துள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய்களில் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்குதல் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (25ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால்களான சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலை எரங்காட்டூர் பாலம், பெருந்துறை - பவானி தேசிய நெடுஞ்சாலை திருவாச்சியில் மழைநீர் வடிகால் பாலம் மைல் 3/4 மற்றும் 4/1, வாவிக்கடை பகுதியில் மழைநீர் வடிகால் பாலம் மைல் 58/7, வாய்கால்மேடு நந்தா கல்லூரி அருகில் மழைநீர் வடிகால் பாலம் மைல் 61/4 ஆகிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்குதல் திட்டத்தின் மூலம் பவானிசாகர் முதல் முத்தூர் வரை கால்வாய் (0/0 முதல் 124/2 மைல் வரை) சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் மதகுகள் 17 இடங்களிலும், மழைநீர் வடிகால் பாலங்கள் 15 இடங்களிலும் மற்றும் பாதுகாப்பு சுவர் 12 கி.மீட்டர் 40 இடங்களிலும் என 84 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அப்பணிகளை கண்காணித்து வருகிறார். அந்த வகையில் இன்று (25ம் தேதி) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏறத்தாழ 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நோக்கத்துடன் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, பூசாரிபாளையம் ஊராட்சியில் உள்ள நடைபாலத்தை அகலப்படுத்தி தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து பாலத்தினை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தலைமை பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை கோவை மண்டலம்) முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் (பவானி வடிநில வட்டம்) மாரிமுத்து, செயற்பொறியாளர்கள் அருளழகன் (பவானிசாகர் அணை கோட்டம்), திருமூர்த்தி (கீழ்பவானி வடிநில கோட்டம்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: