செவ்வாய், 23 ஜூலை, 2024

உதய் மின் திட்டத்தால் மின் கட்டண உயர்வு என்பது ஏற்க முடியாது: ஈரோட்டில் அதிமுக வழக்கறிஞர்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3வது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் ஈரோட்டில் இன்று (23ம் தேதி) அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஈரோடு ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே .வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பருப்பு, பாமாயில் போன்றவற்றை நியாய விலை கடைகளில் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

மேலும், உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தின் காரணமாக விசைத்தறி தொழில் பெரும் அளவு நசிந்து விட்டதாகவும் இதனால் நெசவு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை, உதய் மின் திட்டத்தை கொண்டு வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது, உதய் மின் திட்டத்தினால் உயர்ந்துள்ளது என திமுகவினர் குற்றம் சாட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

பல்வேறு தரப்பினரை பாதிக்கும் வகையில் மின்சாரத்தை கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால் அதற்கு மாறாக தற்பொழுது அதனை உயர்த்தி உள்ளனர். 

எனவே உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், புதிய மூன்று குற்றவியல் சட்டங்களின் போராட்டத்திற்கு திமுக ஸ்டிக்கரை ஒட்டுகிறது எனவும் குற்றம் சாட்டினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: