ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (6ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 10ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் ஒரு இடத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை,குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.
அதன்படி, ஈரோடு வட்டத்தில் சித்தோடு விளையாட்டு மாரியம்மன் கோவில் நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், பெருந்துறை வட்டத்தில் கருக்கம்பாளையம் நியாய விலைக் கடையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மொடக்குறிச்சி வட்டத்தில் சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம் (கிராமம்) நியாய விலைக் கடையில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடக்கிறது.
அதேபோல, கொடுமுடி வட்டத்தில் கொளத்துப்பாளையம் நியாய விலைக் கடையில் ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் புஞ்சை துறையம்பாளையம் நியாய விலைக் கடையில் கோபி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நம்பியூர் வட்டத்தில் நம்பியூர்-1 நியாய விலைக் கடையில் சின்னப்புலியூர் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும், பவானி வட்டத்தில் புன்னம்-2 நியாய விலைக் கடையில் மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) தலைமையிலும் நடைபெற உள்ளது.
மேலும், அந்தியூர் வட்டத்தில் மூங்கில்பட்டி நியாய விலைக் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், சத்தியமங்கலம் வட்டத்தில் கூத்தம்பாளையம், குத்தியாலத்தூர் (கிராமம்) நியாய விலைக் கடையில் ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் தலைமையிலும், தாளவாடி வட்டத்தில் கெட்டவாடி நியாய விலைக் கடையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் நடக்கிறது.
எனவே, நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: