இந்த விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 2,124 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.02 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்த விழாவில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசால் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் துவங்கப்பட்டுள்ளது.
இதில் ஈரோடு மாவட்டத்திற்கு 14,199 மிதிவண்டிகள் ரூ.6.84 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மாணவிகளின் மிதிவண்டி விலை ரூ.4 ஆயிரத்து 760, மாணவர்கள் மிதிவண்டி விலை ரூ.4 ஆயிரத்து 900 ஆகும்.
அந்த வகையில், முதற்கட்டமாக, வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 276 மாணவியர்களுக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 146 மாணவர்களுக்கும், ஈரோடு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 264 மாணவியர்களுக்கும், குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 75 மாணவர்கள், 54 மாணவியர்களுக்கும், கருங்கல்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 254 மாணவியர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
அதேபோல், காமராஜ் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 163 மாணவர்களுக்கும், ரயில்வே காலனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 100 மாணவர்கள், 27 மாணவியர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளான சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 99 மாணவர்களுக்கும், செங்குந்தர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 220 மாணவர்களுக்கும், கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 349 மாணவியர்களுக்கும், சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97 மாணவியர்களுக்கும் என 1,321 மாணவியர்களுக்கும், 803 மாணவர்களுக்கும் என மொத்தம் 2,124 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரும் பயண நேரத்தினையும் குறைத்து பயனுள்ள வகையில் செலவிடுவதற்காக இந்த மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் இத்தகைய திட்டங்களை பெற்று பயனடைந்து, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் சிறப்பாக கல்வி கற்று உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கஸ்தூரி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் பெல்ராஜ், கபீர், பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: