ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள குருவரெட்டியூரில் இருந்து, சேலம் மாவட்டம் கண்ணாமூச்சி செல்வதற்காக, தனியார் மினி பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் இன்று (13ம் தேதி) மாலை சென்றது. இதில், குருவரெட்டியூர் அரசு பள்ளி சிறுவர் , சிறுமியர்கள் 15க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
சனிசந்தையில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு, கரடிப்பட்டியூர் வழியில் சென்றது. அப்போது, கருங்கரடு பூலேரிக்காடு என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கரடிப்பட்டியூர் ஏரியிலிருந்து மண் லோடு ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி, மினி பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த, 15 பள்ளி சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளித்திருப்பூர் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று, கருங்கரட்டை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் கிருபா (வயது 10), சதீஸ்குமார் மகன் திவித் (வயது 13), மணிகண்டன் மகள் ரித்திகா (வயது 7), விலாமரத்துக்காட்டை சேர்ந்த கந்தசாமி மகன் கோகுல் (வயது 10), ஓலையூரை சேர்ந்த ரங்கன் மகள் ரேணுகாதேவி (வயது 13), ஜிஜி நகரை சேர்ந்த சித்துராஜ் மகன் சச்சின் (வயது 7) மற்றும் மினி பஸ் டிரைவர் செல்வன் (வயது 35) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்ட மற்ற சிறுவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 coment rios: