இந்த ஆய்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்க கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதனை விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் வசதி ஏற்கனவே உள்ளது. பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளையே அதிகம் நாடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.
இன்று (11ம் தேதி) அரசு மருத்துவமனையின் சேவையினை மேம்படுத்திடும் வகையில் 20 கட்டண படுக்கை அறைகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து கோவை, மதுரைகளில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கட்டண படுக்கைகள் 16 இடங்களில் திறக்க அறிவிக்கப்பட்டது. மற்ற இடங்களிலும் விரைவில் இச்சேவையினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
மிக குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதிகளுடன் அறை அமைந்துள்ளது. அதிகம் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட ஈரோடு, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இதில் மொத்தமாக 9,82,334 அழைப்பாணை அனுப்பப்பட்டு 4,19,143 பேர் வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.
இதில், 13,089 பேருக்கு புற்று நோய் சந்தேகம் இருந்த போதிலும், 176 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தில் 3,29,473 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 1,27,011 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 3,039 சந்தேகம் இருந்த நிலையில் 50 பேருக்கு மட்டுமே புற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் புற்று நோய் பாதிப்பு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் 1,021 மருத்துவர் பணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்பப்பட்டது. மேலும், 977 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 986 மருந்தாளுநர் நியமிக்கப்பட உள்ளனர். காலி பணியிடங்களை வெளிப்படையாக அறிவித்து அவர்களின் விருப்பத்தின் பேரில் பணியிடம் ஒதுக்கப்படுகிறது.
மருத்துவர் நியமனத்திற்காக 2,053 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. தேர்வு நடைபெற உள்ளது. முடிவு வெளியானதும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர். 1,066 சுகாதார ஆய்வாளர்கள் நியமன வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2,250 கிராம சுகாதார செவிலியர் பணியிடம் நிரப்புவதற்கான வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. வழக்குகள் முடிந்ததும் அந்த பணியிடங்களும் நிரப்பப்படும். குழந்தைகள் பிரிவுகளில் குழந்தைகள் பாதுகாப்பிற்கென உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
முன்னதாக, அமைச்சர்கள் சுப்பிரமணியன், முத்துசாமி ஆகியோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவில் கட்டிடப்பணிகளுக்காக ரூ.60 லட்சம் மற்றும் தளவாடங்களுக்காக ரூ.36 லட்சம் என மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற 20 கட்டணப் படுக்கைகள் கொண்ட அறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின்போது, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை வே.செல்வராஜ், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அம்பிகா சண்முகம், துணை இயக்குநர் (நலப்பணிகள்) சோமசுந்தரம் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: