வியாழன், 8 ஆகஸ்ட், 2024

கவுந்தப்பாடியில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ரூ.32.14 லட்சம் மோசடி புகார்: வங்கி மேலாளர் உள்பட இருவர் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் கொடுத்து வசூலிக்கும் பந்தன் என்ற தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் சேமிப்பு கணக்கை துவங்கி இருந்தனர். இவ்வாறு சேமிப்பு கணக்கை துவங்கிய வாடிக்கையாளர்களிடம் தனியார் வங்கி ஊழியர்கள் சிலர் மோசடியாக ஆதார் உள்ளிட்ட சில ஆவணங்களை பெற்று வாடிக்கையாளருக்கே தெரியாமல் அவர்களின் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில், கவுந்தப்பாடியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கி ஊழியர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வங்கி மேலாளரான கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன், காசாளரான கோபியைச் சேர்ந்த கோகுலபிரியா, வசூல் அலுவலர்களான கவுந்தப்பாடியைச் சேர்ந்த தீபிகா மற்றும் கோபியைச் சேர்ந்த பிரபாகரன், சக்திவேல் ஆகியோர் கடந்த ஆண்டு 2023ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024ம் ஆண்டு மார்ச் வரை வங்கி வாடிக்கையர்களான பெண்களிடம் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து ஆவணங்களை பெற்று வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து, ரூ.45 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வாடிக்கையாளரிடம் அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவர்களது கணக்கிலிருந்து முறைகேடு செய்து 65 வாடிக்கையாளரின் கைரேகையை வைத்து மோசடியாக பயன்படுத்தி சேமிப்பு கணக்கிலிருந்து ரூ.32.14 லட்சம் பணத்தை மோசடி செய்ததும், வாடிக்கையாளரின் கைரேகையை போலியாக பதிவு செய்து ஆவணங்களை பெற்று தவறாக உபயோகித்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட தனியார் வங்கியின் கோவை மேலாளர் கார்த்திகேயன் மற்றும் கவுந்தப்பாடி வங்கியின் வசூல் பிரிவு அதிகாரி சக்திவேல் ஆகியோரை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். மேலும், மோசடி புகாரில் தொடர்புடைய வங்கி ஊழியர்களான கோகிலப்பிரியா, தீபிகா, பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: