சனி, 3 ஆகஸ்ட், 2024

அமைச்சர் துரைமுருகன் கர்நாடக அரசிடம் கை நீட்டி பணம் வாங்கி விட்டாரா என சந்தேகம்: அண்ணாமலை

எனக்கும் சீனியர் அமைச்சரான துரைமுருகன் மீதும் ஒரு சந்தேகம் வருகிறது. அவர், கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் அவர் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று ஈரோட்டில் அண்ணாமலை கூறினார். 
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் 219வது நினைவு தின ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்த ஆட்சியின் நிறைவில், பணிகளை முடித்துவிட்டோம் என்று கூறினார்கள். ஆனால், இந்த ஆட்சி துவங்கி, 3 ஆண்டுகள் ஆகியும் தினமும் ஒரு காரணம் கூறி தள்ளிப்போடுகிறது. இதுபற்றி, பாஜக சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

தமிழகத்தில் தொடர் கொலை பற்றி சில திமுக அமைச்சர்கள் கூறுகிறார்கள். இவை எல்லாம் முன்விரோதம் காரணமாக கொலை செய்து கொண்டனர். இதை நாங்கள் எப்படி தடுக்க முடியும் என்கின்றனர். இந்தியாவில் எந்த கொலையாக இருந்தாலும் முன்விரோதம் உட்பட ஏதாவது ஒரு காரணத்தால் தான் நடக்கும். அவ்வாறு தான் 99 சதவீத கொலைகள் நடக்கும்.

1 சதவீத கொலைகள் மட்டுமே ‘பேஷன் கிரைம்’ என கூறப்படும். அதாவது, எந்த காரணமும் இருக்காது, திடீரென நடந்துவிடும். 98, 98 சதவீத கொலைக்கு அடிப்படை காரணம் இருக்கும். தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றுக்கூட கோவையில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தினமும் ஒரு ஊரில் ஒரு கொலையாகிறது. எப்போதும் முன்விரோதமும், காரணங்களும் கொலைக்கு இருந்தாலும், ஏன் இப்போது அதிகரித்துள்ளது என பார்க்க வேண்டும்.

இப்போது காவல் துறையின் கைகள் கட்டுப்பட்டுள்ளன. எங்கு வேண்டுமானாலும் கொலை செய்யலாம். 3 மாதத்தில், 6 மாதத்தில் பெயில் வந்துவிடும் என்ற தைரியம். இரு இன்ஸ்பெக்டர், ஒரு ஊருக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்ததும், அந்த ஊரில் என்னென்ன கொலைகள் நடந்துள்ளது. பழிக்கு பழி நடக்குமா. ஜாதிய மோதல் நடக்குமா?. வாய்க்கால் தகராறில் நடக்குமா? என தெரியும். அப்படியானால், எதிர் தரப்பில் உள்ளவரை கண்காணிப்பது தான் போலீசின் வேலை.

அவ்வாறு வழக்கு போட வேண்டும். சில கட்டுப்பாட்டுக்காக குண்டர் தடுப்பில் சிறையில் அடைக்க வேண்டும் என தீர்மானிப்பார்கள். இங்கு அடிப்படை காவல் பணிகள் நடக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர்கள் செய்ய வேண்டிய பணிகளை செய்யவில்லை. அதற்கான அதிகாரத்தை அரசு அவர்களுக்கு வழங்கவில்லை. அதனால் தினமும் குறைந்த பட்சம், 13 முதல், 14 கொலைகள் தமிழகத்தில் நடக்கிறது. சட்டம் – ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது. இதற்கு திமுகவினர் கூறும் காரணம் கேட்டால், சிரிப்பு வருகிறது.

மேகதாது அணை அமைக்க கர்நாடகா முயல்வதற்கு மத்திய அரசின் மீது சந்தேகமாக உள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். எனக்கும் சீனியர் அமைச்சரான துரைமுருகன் மீதும் ஒரு சந்தேகம் வருகிறது. அவர், கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் அவர் கை நீட்டி பணம் வாங்கிவிட்டாரா என்று சந்தேகம் வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் அரசு பள்ளி குறித்து திமுக அரசோ, அமைச்சர்களோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதனால்தான் சந்தேகமாக உள்ளது என்கிறேன்.

சிவகுமார், சித்தராமையாவை எதிர்க்கும் தைரியமில்லை. எதிர்த்து அறிக்கைவிடவில்லை. அவர்கள் செய்வது தவறு என தெரிந்தும், வாய் திறந்து பேசவில்லை. கலைஞர் குடும்பத்தார்தான் கர்நாடகாவில் பல ஷோரூம்கள் வைத்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு மால்கள் உள்ளன. கர்நாடகா பற்றி பேசினால், முதலில் நம்ம கடையை உடைப்பார்கள் என திமுக ஐடியா செய்கிறதா?. தற்போது மழை வந்துவிட்டதால், நாம் காவிரி பிரச்னையை பேசவில்லை.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய வியாதி மறதியாகும். காவிரியில் தண்ணீர் வந்ததால், காவிரி பிரச்னையை நாம் மறந்துவிடுவோம். இனி அடுத்த வருஷம் தான் வரும். அதுவரை, மத்திய அரசின் மீது எதையாவது பழி போட்டு, ஓட்டி வருகின்றனர் எனவும் தீரன் சின்னமலை அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து அழைத்துச் சென்ற தலைவர், மூன்று முறை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு, அந்த காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்த தலைவர்களுடன் இணைந்து பாடுபட்டவர்.

இவர் சூழ்ச்சியால் தான் முறியடிக்கப்பட்டார். நேர்மையான முறையில் இவரை முறியடிக்க முடியவில்லை. இவரது பெருமையைப் பற்றி தமிழக அரசு பேச வேண்டும் என்பதுடன், தீரன் சின்னமலையின் முழுமையான வரலாற்றை மக்களுக்கு தெரியும் வண்ணம் தமிழக அரசு இவரை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பேட்டியளித்தார். அப்போது, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, நிர்வாகிகள் முருகானந்தம், ஜி.கே.நாகராஜன், வேதானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: