திங்கள், 12 ஆகஸ்ட், 2024

போதை பொருள் ஒழிப்பு: ஈரோடு ஆட்சியர் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (12ம் தேதி) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்பு இன்று (12ம் தேதி) நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவ, மாணவியர்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் உள்ளீர்கள். இன்று எடுத்த உறுதிமொழியினை வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்க வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் தொடர்பாக, வாரம் ஒருமுறை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதை பொருட்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பாக அரசின் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், நீங்களும் அதற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மாணவ, மாணவியர்கள் எவ்வித தவறான பழக்கத்திற்கும் ஆளாகாமல் வாழ்வில் முன்னேற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 2022ம் ஆண்டு 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும், கடந்த ஆண்டு 70 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர்.

எனவே, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உள்ளது. நம் வாழ்க்கை முக்கியம், நமது பெற்றோர்கள் முக்கியம் என நீங்கள் அனைவரும் நினைத்து கல்வி கற்பதில் கவனம் செலுத்தி வாழ்க்கையில், முன்னேற வேண்டும் எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியான, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும், போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.

போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று மாவட்ட ஆட்சியர் வாசிக்க, பின்தொடர்ந்து மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, கோட்ட கலால் அலுவலர் வீரலட்சுமி, மாநகர நல அலுவலர் பிரகாஷ், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பெல்ராஜ் மற்றும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: