இந்த கூட்டத்திற்கு பின், அமைச்சர் முத்துசாமி அத்திக்கடவு-அவிநாசி திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி திட்டப் பணிகளின் நிலை குறித்து தொடர்ந்து, கேட்டறிந்து வருவதுடன், விரைவாக இத்திட்டத்தினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
இந்த திட்டத்தை முடிக்க அதிகாரிகள் இரவு பகலாக வேலை செய்கிறார்கள். ஆட்சியர் வார வாரம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திட்ட காலதாமத்திற்கு திமுக அரசு தான் காரணம் வெளியில் செய்திகள் பரப்பப்படுகிறது. திட்டத்தில், 6 நீரேற்று நிலையங்களில் முதல் 3 நீரேற்று நிலையங்களுக்கு இடையே உள்ள நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.
இந்த பம்பிங் ஸ்டேஷன் அமைக்கும் இடத்தில் நிலத்தை பயன்படுத்தி கொள்ள விவசாயிகளிடம் கேட்டோம். 1,416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, இதில் 100 விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்திற்கான தொகை வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடமும் பேசிவிட்டோம். அந்தப் பணியும் முடிந்து விடும். தற்போது அத்திக்கடவு அவினாசி திட்டம் தயார் நிலையில் உள்ளது. முறைப்படி 1.5 டிஎம்சி கசிவு நீர் கூடுதலாக வரும் பட்சத்தில் தண்ணீர் வந்தவுடன் திறக்கப்படும்.
திமுக அரசு எடுத்த முயற்சியின் காரணமாக வருகின்ற 15ம் தேதி தண்ணீர் வந்தவுடன், அதிலிருந்து 10 நாட்களுக்கு பிறகு கசிவு நீர் வந்தவுடன் 70 நாட்களில் 1.5 டி.எம்.சி பயன்பட்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த திட்டத்தில் 1,045 குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தில் மேலும் குளங்கள் இணைக்கும் திட்டம் தற்போது இல்லை. அதிகளவிலான குளங்களை இணைக்க தனி திட்டம் தான் கொண்டு வர முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும்.
திட்டம் குறித்து உண்மை தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். அரசியல் செய்கிறார் நான் சொல்லவில்லை. திட்டம் தாமதத்திற்கான காரணத்தை கூறி விட்டோம். இதை அவர்கள் புரிந்து கொண்டு வருகின்ற 20ம் தேதி பாஜக நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்தப் பேட்டியின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
0 coment rios: