ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் எல்.பி.பி. வாய்க்காலின் சீரமைப்பு பணிகளை கண்காணித்து, இப்பணிகளை விரைந்து முடித்திடவும், ஆகஸ்ட் 15ம் தேதியன்று தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை முடித்து, தண்ணீர் திறந்துவிடும் அளவிற்கு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் முதல் போக பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானித் திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்திற்கு இன்று (15ம் தேதி) முதல் 12.12.2024 முடிய 120 நாட்களுக்கு 23846.41 மி.க.அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயில் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயில் இரட்டைப்படை மதகுகளுக்கும் தற்போது அணையில் உள்ள நீர் இருப்பு, வடகிழக்கு பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கீழ்பவானித் திட்ட பிரதானக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீரின் அளவு 200 கன அடி முதல் 2300 கன அடி வரை படிப்படியாக உயர்த்தப்பட்டு 120 நாட்களுக்கு 23.846 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்படும். இதில் ஈரோடு மாவட்டத்தில் 91,284 ஏக்கர் நிலங்களும், திருப்பூர் மாவட்டம் 10,228 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 1,988 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அணையில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. மழையும் போதிய அளவு இருக்கிறது. எனவே, இந்த தண்ணீர் விவசாயிகளுக்கு சரியான அளவிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நிறைவு செய்வதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல மகசூலை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), சி.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, கண்காணிப்பு பொறியாளர் உதயகுமார் (பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத் துறை), செயற்பொறியாளர்கள் திருமூர்த்தி, (கீழ்பவானி வடிநிலக் கோட்டம்), அருள் அழகன் (பவானிசாகர் வடிநிலக் கோட்டம்), உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: