ஈரோட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று (4ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அத்திக்கடவு-அவிநாசி திட்ட முன்னேற்ற நிலை தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (4ம் தேதி) நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி திட்டப் பணிகளின் நிலை குறித்து தொடர்ந்து, கேட்டறிந்து வருவதுடன், விரைவாக இத்திட்டத்தினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 6 நீரேற்று நிலையங்களில் 1 முதல் 3 நீரேற்று நிலையங்கள் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிறு தொய்வு ஏற்பட்டதன் காரணமாக பணிகள் சிறு காலதாமதமானது. நீரேற்று நிலையம் 1 முதல் 3 இடையில் உள்ள பட்டா நிலங்களின் வழியாக பிரதான குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கும் முன் நில இழப்பீடு மற்றும் பயிர் இழப்பீடு தொகை வழங்கிய பின் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதால் ஜூன் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்க இயலவில்லை.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம் பல்வேறு பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டும் நில உரிமையாளர்கள் முன் வரவில்லை. தொடர்ந்து நில உரிமையாளர்களிடம் அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு செப்டம்பர் 2022 முதல் குழாய் பதிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு ஜனவரி 2023ல் பணிகள் முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி சோதனை ஓட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
இருப்பினும் பயன்பாடு இல்லாத காரணத்தால் பல்வேறு இணைப்பு குழாய்களில் பழுது ஏற்பட்டு நீர்கசிவு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து, பிற துறைகள் மூலம் கிளைக் குழாய்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்து ஜூன் 2023-ல் 750 குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் போதிய உபரி நீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால் மீண்டும் நவம்பர் 2023-ல் தொடங்கப்பட்டு ஜனவரி 2024-ல் 1045 குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
மார்ச் 2024 முதல் உபரிநீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால் இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இயலவில்லை. மேலும், 30.07.2024 முதல் காலிங்கராயன் அணைக்கட்டில் உபரிநீர் வரத்தொடங்கி, காவேரி ஆற்றில் வெள்ள நீர் வரத்தொடங்கியதால், இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னேற்பாடாக சோதனை ஓட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று உறுதியாக பவானிசாகரில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, தண்ணீர் திறந்து விட்ட பிறகு கிடைக்கும் அதிகப்படியான உபரிநீர் பெற்றவுடன் 6 நீரேற்று நிலையங்களிலும் ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்புகள் அமைந்தவுடன் உடனடியாக இத்திட்டப்பணியினை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் இத்திட்டத்தில் தனி கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் இத்திட்டத்தில் சிறு, சிறு பழுதுகள் ஏதேனும் இருப்பின் அந்த பழுதுகளையும் விரைந்து முடிக்க தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பட்டா நிலங்களின் வழியாக செல்லும் அத்திக்கடவு அவிநாசி திட்டக் குழாய்களை இயக்கம் மற்றும் பராமரிப்பு காலங்களில் சென்று ஆய்வு மற்றும் பழுது பார்ப்பதற்கு எதுவாக நில உரிமையாளர்களுக்கு நிரந்தர குத்தகை மூலம் பாதை உரிமை தொகை பெறுவதற்கு ஒப்புக்கொண்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, தற்பொழுது அரசாணை கிடைக்கபெறும் நிலையில் உள்ளது. அரசாணை பெற்றவுடன் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக நில உரிமையாளர்களிடம் பாதை உரிமைக்கான ஒப்பந்தம் இடப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன், இத்திட்டம் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார் (ஈரோடு), கண்ணப்பன் (கோபிசெட்டிபாளையம்), நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருமலைகுமார், செயற்பொறியாளர்கள் நரேந்திரன், சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முகம்மது குதுரத்துல்லா (பொது), பிரேமலதா (நிலம்) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: