புதன், 7 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர்

முதலாவது தேசிய கைத்தறி தினம் தமிழ்நாட்டில் 2015ம் ஆண்டு சென்னையில் கொண்டாடப்பட்டது. தற்பொழுது இன்று (7ம் தேதி) பத்தாவது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 190 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 56 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் என 246 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் 59,733 கைத்தறி நெசவாளர்களும் மற்றும் 7,550 விசைத்தறி நெசவாளர்களும் உள்ளனர்.

கைத்தறி கண்காட்சியில் ஈரோடு மாவட்டத்திலுள்ள 27 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் கலந்து கொண்டுள்ளது. மேலும், இக்கண்காட்சியில், பெட்ஷீட்கள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள், ஜமுக்காளம், சேலைகள், மேட்கள் போன்ற இரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், அனைத்து கைத்தறி ஜவுளி ரகங்களுக்கும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியானது, இன்று (7ம் தேதி) மற்றும் நாளை (8ம் தேதி) காலை 10 முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் கைத்தறி பொருட்களை அதிக அளவில் வாங்கி கைத்தறி நெசவாளர்கள் வாழ்வு மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, கண்காட்சியில் 8 மூத்த கைத்தறி நெசவாளர்களுக்கு சால்வை அணிவித்து, கேடயங்களை வழங்கி, கௌரவித்தார். மேலும், 5 நெசவாளர்களுக்கு நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை, 5 நெசவாளர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 25 ஆயிரத்து 222 மதிப்பீட்டில் உதவித்தொகை, இ- முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, கைத்தறி குழும செயல் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் தறிக்கூடம் தொகை, கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 5 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் அச்சு ஒடி நாடா தொகை, 10 உறுப்பினர்களுக்கு முதியோர் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் என மொத்தம் ரூ.37.95 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பாயிண்ட்-ல் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி இயக்குநர் (கைத்தறி) தமிழ்செல்வன், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) மோகன்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: