ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் இன்று (6ம் தேதி) நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வ.பன்னீர்செல்வம் கோரிக்கை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்கள் அனுப்பும் மனுக்கள் மீது காப்பீடு நிறுவனம், கருவூலக் கணக்கு ஆணையர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை. சரியான வழிகாட்டுதல் இன்மையால் மருத்துவ காப்பீட்டுத் தொகையை முழுமையாக பெற இயலாமல் ஓய்வூதியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றனர். எனவே, முழுமையாக செலவுத் தொகையை பெற்றிட காசு இல்லா மருத்துவம் என்ற அரசின் வாக்குறுதியை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்தல் கால வாக்குறுதி படி 70 வயதினை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடு ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ஓய்வூதியத்தை தொகுத்து தரும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயமனோகரன், அரசு போக்குவரத்துக் கழக பெற்றோர் நல அமைப்பு மண்டலத் தலைவர் ஜெகநாதன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் மணிபாரதி, அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் குப்புசாமி, அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்க கோட்டச் செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் தர்ணாவில் கலந்து கொண்டனர். முடிவில், அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
0 coment rios: