செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாளை மறுதினம் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுதந்திர தின விழா ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. 15ம் தேதி காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தேசியக்கொடி ஏற்று வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளை கௌரவிக்கிறார்.

இதனையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் பிரியா சாய்ஸ்ரீ, காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா தலைமையில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பயணிகளின் உடைமைகளை தீவிர பரிசோதனை செய்த பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டன. ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினா். 


மேலும், ஈரோடு வந்த ரயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்கி பயணிகளின் உடைமை களை சோதனை செய்தனர். அப்போது பயணிகளிடம் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு வர வேண்டாம் என‌ அறிவுறுத்தினர். 

இதேபோல், ஈரோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சோதனைச்சாவடியிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: