யூனியன் பேங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் சார்பில் 13வது மாநில மாநாடு ஈரோட்டில் இன்று (10ம் தேதி) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.இம்மாநாட்டில் திராவிடர் கழக தலைவா் கி.வீரமணி சிறப்புரையாற்றி பேசியதாவது, தந்தை பெரியார் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
குழந்தைகளின் முதல் ஆசிரியர் தாய் தான். எனவே பெண்கள் சிந்திக்க கூடியவர்களாகவும், கல்வி கற்று வேலை வாய்ப்புகளில் அமர்வதும் அவசியமாகிறது. சமூக நீதி என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்ட இன்றும் போராட வேண்டிய நிலை தான் இருந்து வருகின்றது.
வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்தியாவிற்கே தமிழ்நாடு முன் உதாரணமாக விளங்கி வருகின்றது. ஒன்றிய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் 52 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் முதல்கட்டமாக 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் முழுமையாக இன்னும் பெற பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர்.
இந்த இட ஒதுக்கீட்டை பெற 14 ஆண்டுகள் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு நாம் எப்போதும் நன்றி செலுத்த வேண்டும். தற்போது நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு தனியார் மயமாக்கப்பட்டால் இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டார்கள். இட ஒதுக்கீடுக்காக போராடிய நாம் இனி தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி அகில இந்திய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
0 coment rios: