செவ்வாய், 3 செப்டம்பர், 2024

ஆப்பக்கூடல், ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பேரூராட்சிகளில் 11 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல், ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்படி, ஆப்பக்கூடல் பேரூராட்சி, ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிமேம்பாட்டு மானியத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டும் பணியினையும், அயோத்தி தாஸ் பண்டிர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆப்பக்கூடல் வார்டு எண்11 அம்பேத்கார் வீதிக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் கவர் சிலேப் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாநில ஆணையம் நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட சுக்காநாயக்கனூர் ரோடு, காந்திஜி வீதி, அந்தியூர் மெயின் ரோடு ராசாயால் குறுக்கு வீதி, அம்பேத்கார் வீதி முதல் கல்லங்காட்டு மேடு சந்திப்பு, அம்பேத்கார் வீதி குறுக்கு வீழுதிகள் மற்றும் அம்பேத்தகார் வீதி முதல் கவுந்தப்பாடி மெயின் ரோடு இணைப்பு வரை தார்சாலை அமைத்தல் பணியையும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணியினையும், ஒலகடம் பேரூராட்சி பழைய பேரூராட்சி அலுவலகம் அருகில் (பெருமாள் கோவில் வீதி), கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணியினையும், மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டும் பணியினையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் ஒலகடம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் முதல் குன்றியூர் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், வார்டு எண்.8 குந்துபாயூர், வார்டு எண்.3 மும்மிரெட்டிபாளையத்தில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், நெரிஞ்சிபேட்டை பேரூராட்சி வார்டு எண் 7 கோரிவீதி மசூதி அருகில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கருங்கரடு பாலமலை ரோடு மற்றும் முருகன் ரைஸ்மில் ரோடு பழுதடைந்த சாலையினை புதிய தார்சாலையாக மேம்பாடு செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 1 சின்னப்பள்ளம் மேல்தெரு 1, 2வது வீதி, சர்ஜ் வீதி, சின்னப்பள்ளம் கீழ் தெரு 1, 4வது வீதி, வார்டு எண் 3 சித்தையன் நகர் 1, 2, 3, 4வது வீதி வரை மற்றும் வார்டு 14 ஆரியாக்கவுண்டனூர் அரிஜன காலனி பழுதடைந்த சாலையினை புதியதார்சாலையாக மேம்பாடு செய்தல் பணியினையும் தொடங்கி வைத்தார்.

மேலும், அம்மாபேட்டை பேரூராட்சி பாரதியார் வீதியில் ரூ.47.99 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.9 கடுமாங்கொட்டாய், வார்டு எண்.15 பாரதியார் வீதி குபேரன் நகர் மெயின் வீதி, 1, 2வது வீதிக்கு தார்சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், பேரூராட்சி தலைவர்கள் கேன்.என்.வெங்கடாசலம் (அம்மாபேட்டை), எஸ்.செல்வி (ஆப்பக்கூடல்), கே.வேலுசாமி (ஒலகடம்), டி.ராஹினி (நெரிஞ்சிப்பேட்டை), பேரூராட்சி செயல் அலுவலர்கள் சதாசிவம் (அம்மாபேட்டை, ஆர்.அன்புசெல்வி (ஆப்பக்கூடல்), (ஒலகடம் (பொ), என்.சிவகாமி (நெரிஞ்சிப்பேட்டை) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: