பயங்கரவாதம் ஒடுக்க என்ன செய்யலாம்? உளவு பாதுகாப்பு அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை
பயங்கரவாதம் முறியடிப்பு நடவடிக்கைக்கான எம்.ஏ.சி., எனப்படும் பன்முகமை மையம், மத்திய உள்துறை அமைச்சகத்தின், உளவுத் துறையின் கீழ் செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு தகவல்களை ஒருங்கிணைக்கும் இந்த அமைப்பு,28 இந்திய உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்களைப் பகிர்ந்து வருகிறது. எம்.ஏ.சி., செயல்பாடுகள் குறித்து, பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லியில் உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா,
பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் எம்.ஏ .சி.,யின் திறனை மேம்படுத்த, தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகள் சார்ந்து பெரிய அளவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
தேசப்பாதுகாப்பில் மத்திய அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை பின்பற்றுமாறு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பாதுகாப்பு அமைப்புகள், புலனாய்வு மற்றும் அமலாக்க அமைப்புகளின் தலைவர்களிடம் அறிவுறுத்தினார். பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோரை வேரறுப்பதில் பாதுகாப்பு அமைப்புகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தினார். இதன் மூலம் தான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், பன்முகமை மையத்துடனான ஈடுபாட்டை அதிகரித்து, இணைந்து செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகள், போதைப் பொருள் ஒழிப்பு முகமைகள், இணையப் பாதுகாப்பு, புலனாய்வு அமைப்புகள், உறுதியான மற்றும் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேசப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, மத்திய அர சின் ஒருங்கிணைந்த அணு குமுறையையே, அனைத்து பாதுகாப்பு முகமைகளும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.