புதன், 12 ஜூன், 2024

ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் நாள் உலக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், அரசு துறைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். மேலும், மற்றும் வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஒட்டுவில்லைகளையும் (ஸ்டிக்கர்) வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986, 01.09.2016 முதல் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இச்சட்ட விதிகளை மீறுவோருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் இரண்டாண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். இரண்டாம்முறையாக இச்சட்ட விதிகளை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழிலாளரின் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களை அனைத்து பணிகளிலும், வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளிலும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் www.pencil.gov.in என்ற இணையதளத்திலும், கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 4252 650 மற்றும் 155214 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர் வினோத்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முகம்மது குதுரத்துல்லா (பொது), பிரேமலதா (நிலம்), தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியம், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் வரும் 21ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

ஈரோட்டில் வரும் 21ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா புதன்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் செவிலியர்கள், டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து தனியார் துறையில் பணியமர்த்தி வருகின்றனர்.

இதன் மூலம் மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்துகொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி இம்மாதம் வருகிற 21ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். 

இம்முகாமின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களில் வாயிலாகவோ அல்லது erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெருந்துறை அருகே 10.5 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

பெருந்துறை அருகே 10.5 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதிக்கு ஒடிசாவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், ஈரோடு ரயில் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சண்முகம், காவல் ஆய்வாளர் சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர் குகனேஸ்வரன் மற்றும் போலீசார் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த ரயில் மதியம் 12 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. ஆனால் சந்தேகப்படும் அந்த நபர் போலீசாரின் கைகளில் பிடிபடாமல் தப்பி சென்று விட்டார். இதையடுத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த நபர் பெருந்துறை சிப்காட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர், பெருந்துறை சிப்காட் பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அந்த நபர் தங்கி இருந்த அறையை சோதனை செய்த போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10.5 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து, போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம், ஜகத்சிங்ப்பூர் அருகே பதேனிக்கன் பலாசா பகுதியைச் சேர்ந்த பிசித்ரானந்த் சாகு மகன் சுஷாந்தகுமார் சாகு (வயது 32) என்பதும், இவர் ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து பெருந்துறை சிப்காட் பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், அவர் பெருந்துறை, பணிக்கம்பாளையம், கிருஷ்ணாம்பாளையம், சத்திரம் புதூர், காட பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் தங்கியுள்ள வட மாநில விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சுஷாந்தகுமார் சாகுவை கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்: ஒருவர் பணியிட மாற்றம்

ஈரோடு அரசு மருத்துவமனையில் இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்: ஒருவர் பணியிட மாற்றம்

ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணா (வயது 75). இவருக்கு கடந்த மே மாதம் 27ம் தேதி காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தாய் சொர்ணவை அவரது மகள் வளர்மதி, ஆட்டோ மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.
அப்போது, அவரச சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர் எக்ஸ்ரே எடுத்து வரும்படி கூறியுள்ளார். வளர்மதி தனது தாய் சொர்ணவை எக்ஸ்ரே பிரிவுக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்தார். இதனையடுத்து, சொர்ணாவுக்கு காலில் வலி ஏற்பட்டது.

இதனால், அங்கு தூக்கு படுக்கையுடன் வந்த பணியாளரிடம் தனது தாயை தூக்கு படுக்கையில் வைத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த பணியாளர் மறுத்து விட்ட நிலையில், வளர்மதி தனது தாயை கையில் தூக்கி கொண்டு மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். 

இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் நோட்டீஸ் வழங்கினார்.

மேலும், இதுதொடர்பாக மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை பணியாளர்கள், தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோரிடமும், தாயை சுமந்து சென்ற வளர்மதியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி, அறிக்கை பெறப்பட்டது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவமனை பணியாளர் பிரகாஷ் மற்றும் முத்துசாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யவும், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த பணியாளர் மைதிலி பவானி அரசு தலைமை மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்வதற்கும் ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா சண்முகம், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
சந்தன மரக் கடத்தலுக்கு துணை போன அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட காவலாளிகள்... சேலம் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம்.

சந்தன மரக் கடத்தலுக்கு துணை போன அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட காவலாளிகள்... சேலம் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான செயில் ரெப்ரேக்டரி நிறுவனம் சேலம் மாமாங்கம் பகுதியில் செயல்பட்டு கொண்டுள்ளது. இடது புறம் உள்ள இந்த நிறுவனத்திற்கு  சொந்தமான சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நிலப்பரப்பில் சுரங்க பகுதி தேசிய நெடுஞ்சாலையின் வலது புறத்தில் உள்ளது. 
சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பொது துறை நிறுவனத்தின் மைன்ஸ் பகுதியில் சந்தன மரங்கள் உட்பட ஏராளமான விலை உயர்ந்த மர வகைகள் செழித்து வளர்ந்து உள்ளன. இந்த நிலையில்,  வளர்ந்த 70 கும் மேற்பட்ட சந்தன மரங்களை வெட்டி கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை சேலத்தில் ஏற்படுத்தி உள்ளது. 
செயில் நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான சுரங்கப் பகுதியில் இரவு பகல் என 24 மணி நேரமும் ஏராளமான தனியார் நிறுவன காவலாளிகள் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 
இதனிடையே வெளியே பயிரை மேய்ந்தது என்ற ஒரு முது மொழியும் உள்ளது, அதற்கு ஏற்ப சந்தன மரங்களை வெட்டி கடத்திய   நகர்களையும், SRCL காவலர் பணியின்  மேற்பார்வையாளர் Head Guard சுப்ரமணி மற்றும் வேலு ஆகியோர் சந்தன மரம் கடத்தலுக்கு துணை போய் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 அதுமட்டுமில்லாமல் சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்களுக்கு துணைபோன தனியார் பாதுகாப்பு நிறுவன தலைமை காவலாளி மற்றும் அவர்களது கூட்டாளிகளுடன் SRCL நிறுவனத்தின் அதிகாரி முருகேசன்  அதிகாரி மதுசெட்டி ஆகியோர் இந்த சந்தன மரம் கடத்தலில் துணை இருப்பதாகவும்,  அதற்காக பல லட்சம் ரூபாய் கடத்தல் நபர்களிடம் பெற்றுள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக உள்ளது.
எனவே கடத்தல் காரர்களையும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பாதுகாவலர்களையும் இந்த சமூக விரோத செயலுக்கு தங்களது பங்கிற்கு கைகோர்த்த ஒரு சில நிறுவன அதிகாரிகளையும் SRCL நிர்வாக அதிகாரி CEO அவர்கள் விசாரணைக்கு  உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சேலம் மாவட்ட வன சரகர் விசாரணை செய்து உரிய குற்றவாளிகளையும் இதற்கு துணைப் போன பாதுகாப்பு அதிகாரி உட்பட காவலாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்பது பொது மக்கள் மற்றும் SRCL  காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேலம. மாவட்ட மாநகர  காவல் துறை இந்த பல லட்சம் மதிப்புள்ள சந்தன  மர கடத்தல் குறித்து விசாரணை செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்த சந்தன மரங்கள் கடத்தல் குறித்து SRCL காவலர்கள் நல சங்க நிர்வாகிகள் ஆகியோர் அளித்த புகாரின்  அடிப்படையில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை  ஒருங்கிணைப்பாளரும், விடுதலை தொழிலாளர்கள் முன்னணியின் மாநில துணை செயலாளருமான சரஸ்ராம் ரவி  அவர்கள் SAIL தலைமை அதிகாரி, விஜிலென்ஸ் அதிகாரி , மாவட ட ஆட்சியர் - சேலம் மற்றும் வன சரக அதிகாரி ஆகியோருக்கு புகார் அளித்தம் விசாரணை துவங்கபடாமல் உள்ளது வேதனைக்குரிய ஒன்று.
மத்திய அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சுரங்கப் பகுதியில் அதிகாரிகள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன தலைமை பாதுகாப்பு அதிகாரிகள் துணையுடன் கடத்தல்காரர்கள் அரங்கேற்றிய இந்த கடத்தல் சம்பவம் குறித்து மத்திய மாநில அரசுகளின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சேலம் மாநகர பொது மக்கள் ஆதங்கப்பட்டு கோரிக்கை முன்வைக்கின்றனர்.

செவ்வாய், 11 ஜூன், 2024

கோபி: டி.என்.பாளையம் அருகே நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை

கோபி: டி.என்.பாளையம் அருகே நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயியான இவர் வாணிப்புத்தூர் பேரூராட்சி துணைத் தலைவராகவும் உள்ளார். இவருக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் நாயை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில், நேற்று காலை தோட்டத்துக்கு சென்றபோது கடித்துக் குதறப்பட்ட நிலையில் நாய் செத்துக் கிடந்தது. உடனே அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அதில் நள்ளிரவு தோட்டத்துக்கு ஒரு சிறுத்தை வருவதும், பின்னர் நாயை கடித்து குதறுவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து தகவல் கிடைத்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து ஆய்வு செய்தனர். இதனிடையே சிறுத்தை நாயை கடித்துக் குதறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

காடுகளை அழிப்பது, வனவிலங்குகளை மனிதர்கள் வேட்டையாடி உண்பது போன்ற காரணங்களால் காட்டில் உணவு கிடைக்காமல் சிறுத்தை போன்ற காட்டு விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.  


ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.13) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.13) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.13) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை அருகே உள்ள பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதுார், பனியம்பள்ளி, கவுண்டம்பாளையம், தொட்டம்பட்டி, வாய்பாடிபுதுார், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகள்.

கோபி அருகே உள்ள கூகலூர் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன்புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்பாளையம், புதுக்கரைபுதூர், பொன்னாச்சி புதூர், தாழக்கொம்புபுதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், சர்க்கரை பாளையம், சானார்பாளையம், மேவாணி, சென்னிமலை கவுண்டன்புதூர், குச்சலூர், சவுண்டப்பூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம், கே.மேட்டுப்பாளையம்,

கோபி துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

கோபி பேருந்து நிலைய பகுதி, பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்ச கவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம், குறவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சை கோபி மற்றும் உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.