ஞாயிறு, 16 ஜூன், 2024

ஈரோட்டில் 560 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை தீவிர சிகிச்சையால் 6.50 கிலோவாக உயர்வு

ஈரோட்டில் 560 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை தீவிர சிகிச்சையால் 6.50 கிலோவாக உயர்வு

560 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தை ஈரோடு சுதா மருத்துவமனையின் தீவிர சிகிச்சையால் 6.50 கிலோவாக உயர்ந்தது.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள சுதா பல துறை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் இரட்டை குழந்தைகள் உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2023 ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணுக்கு 6 மாதத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டத்தை அடுத்து, அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அப்பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தைகள் பிறந்தது.

இதில், இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்த நிலையிலேயே பிறந்தது. மற்றொரு குழந்தை வேறும் 560 கிராம் எடையுடன் பிறந்தது. இதையடுத்து தாய், சேய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், குழந்தைக்கு மட்டும் மூச்சு திணறல் பிரச்சனை இருந்ததால் வெண்டிலேட்டர் மூலமாகவும், ஆக்சிஜன் சிலிண்டர் மூலமாகவும் சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும், 200 நாட்களுக்கு மேலாக தொடர் சிகிச்சையும், அதன்மூலம் குழந்தைக்கு தேவையான புரதச்சத்து மற்றும் கொழுப்பு சத்து போன்றவை வழங்கப்பட்டதன் விளைவாக தற்போது குழந்தை 6.50 கிலோ எடையுடனும், மூளை வளர்ச்சியுடன் உள்ளதாக சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதாகர் மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர்கள் ரங்கேஷ், கவுரி சங்கர் ஆகியோர் தெரிவித்தனர்.
அமெரிக்காவின்  நாசா NSS ISDC மாநாட்டில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று சாதனை.

அமெரிக்காவின் நாசா NSS ISDC மாநாட்டில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று சாதனை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

அமெரிக்காவின்  நாசா NSS ISDC மாநாட்டில் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை. 

அமெரிக்காவின் நாசாவில் NSS IADC மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்த 167 மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை புரிந்தனர். உலகின் வேறு எந்த நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் இந்த அளவிற்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீ சைதன்யா பள்ளியின் இயக்குனர் திருமதி சீமா கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற நாசாவின் NSS விண்வெளி தீர்வு போட்டிகள் 2024ல் 28000 மாணவர்கள் இந்தியாவில் இருந்து மட்டும் கலந்து கொண்டனர். இதில் சேலம் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்து 639 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 62 செயல்திட்டங்கள் வெற்றி பெற்று ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தது. தொடர்ந்து 11வது முறையாக உலக சாம்பியனாக வெற்றி பெற்று வெற்றி வாகை சூடியது. இதில் ஏழு செயல் திட்டங்கள் உலக அளவில் முதல் பரிசையும், 11 செயல் திட்டங்கள் உலக அளவில் இரண்டாவது பரிசையும், 15 செயல் திட்டங்கள் உலக அளவில் மூன்றாவது இடத்தையும், 29 செயல் திட்டங்கள் கௌரவ பரிசையும் வென்றது. 

மேலும் கல்வி சுற்றுலாவில் தமிழகத்தில் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்த 32 மாணவர்கள் கலந்து கொண்டனர். வேறு எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்தும் எந்த ஒரு மாணவரும் ISDCல் பங்கேற்கவில்லை. தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்து ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில்  கலைத்துறையில் வெற்றி பெற்று 500 டாலர்கள் பரிசு பெற்ற ஒரே மாணவர் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்தவர் ஆவார்.

அதுமட்டுமில்லாமல் இந்த மாநாட்டில் 500 டாலர்கள் பரிசு பெற்ற ஒரே மாணவர் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ சைதன்யா பள்ளி குழுவானது கடந்த 13 ஆண்டுகளாக நாசாவின் NSS ISDCல் கலந்து கொண்ட ஒரே குழுவாகும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த உலக நாடுகளிலோ எந்த ஒரு நிறுவனமும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை. 

மாநாடு நாட்களில் எங்கள் பள்ளியின் மாணவர்கள் நாசா விண்வெளி வீரர்கள் ஜோஸ் எம் அர்னான்டஸ் மற்றும் பிரைன் வெர்ஸ்ட்ரீக் கருத்தியல் வடிவமைப்பாளர் ஸ்பெக்ப்ஸ்.காம் ஆகியோரை சந்தித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

ஸ்ரீ சைதன்யா பள்ளி ஆனது கிருக்பித் ஆய்வகம், கலிபோர்னியா அறிவியல் மையம் மற்றும் ஆப்பிள் பார்க், சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள ஐபிஎம் அருங்காட்சியகம், சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு சென்று ஸ்டெம் பட்டறையில் கலந்து கொண்டு பல பொறியியற் திறன்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப போக்குகள் பற்றிய தகவல்களை கற்றுக் கொண்டது. சுற்றுப்பயணம் முழுவதும் மாணவர்கள் குழு அமெரிக்காவைப் பற்றிய எண்ணிலடங்கா அறிவையும் மற்றும் நாட்டின் தொழில்நுட்ப  சமூகம் மற்றும் பொருளாதாரம் முன்னேற்றத்தின் நேர்த்தியையும் அறிந்து கொண்டனர். 

நாசாவின் NSS மாநாட்டில் கலந்து கொள்ள பெரும் முயற்சி செய்த ஸ்ரீ சைதன்யா பள்ளி நிர்வாகத்திற்கு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நாசாவின் NSS ISDC மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஸ்ரீ சைதன்யா பள்ளியின் இயக்குனர் திருமதி சீமா அவர்கள் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.



சனி, 15 ஜூன், 2024

பவானி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது: 640 கிலோ பறிமுதல்

பவானி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது: 640 கிலோ பறிமுதல்

 ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பவானி, மூவேந்தர் நால்ரோடு பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் மூவேந்தர் நகர் நால்ரோடு அருகில் வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, 16 மூட்டைகளில் 640 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தி வந்த நபரான பவானி குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக் கோட்டை, ஜூவாநகரைச் பூபதி (வயது 50) என்பதும், இவர் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி வெப்படை மற்றும் கல்லாங்காட்டுவலசு பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, பூபதியை கைது செய்து, 16 மூட்டைகளில் சுமார் 640 கிலோ ரேசன் அரிசியும், ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் வாகனத்தையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழப்பு

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தில் விவசாயி மாதேஷ் என்பவரின்தோட்டத்தில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை இன்று மாலை சிறுத்தை தாக்கி கடித்துக் கொன்றது.
 இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஜமாபந்தி

ஈரோடு மாவட்டத்தில் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஜமாபந்தி

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் வரும் 20ம் தேதி முதல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், அந்தியூர் வட்டத்தில் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், பவானி, நம்பியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களில் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 20ம் தேதி அன்றும், (சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக) அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

எனவே, பொது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் சமர்ப்பித்து உரிய நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொடுமுடியில் 19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கொடுமுடியில் 19ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்.

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் வரும் 19ம் தேதியன்று காலை 9 மணி முதல் மறுநாள் 20ம் தேதி காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளனர். மேலும், 19ம் தேதியன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற உள்ளனர்.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி: ஜூன்.25ல் துவக்கம்

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி: ஜூன்.25ல் துவக்கம்

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், 2வது தளத்தில் செயல்படும் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வரும் ஜூன் 25ம் தேதி பெண்களுக்கான தையற்கலை இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது.

இந்த பயிற்சியானது, ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை 30 நாள்கள் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்குக்கு உட்பட்ட பெண்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கும், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களும், அவா்களது குடும்பத்தாரும் இப்பயிற்சியில் சேரலாம். இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.

விருப்பமுள்ளவா்கள் 0424-2400338 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 8778323213 , 7200650604 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.