வெள்ளி, 21 ஜூன், 2024

ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோட்டில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் கால வாக்குறுதிகளான காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தர்ணாவிற்கு மாவட்ட செயலாளர் எம்.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

ஒருங்கிணைந்த இந்தியமுறை மருத்துவமனை பணியாளர் சங்க மாநில செயலளார் எம்.சந்திரமௌலி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்ட போராட்டத்தின் இறுதியாக சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பி.விஜயன் நன்றி கூறினார்.
படம் உள்ள
பெருந்துறை அருகே காரில் கடத்திய 397 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

பெருந்துறை அருகே காரில் கடத்திய 397 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகப்படும் வகையில் கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்று, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது.
இதனையடுத்து, போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து, காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசராணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வியாபாரியான புனாம ராம் சவுத்ரி (வயது 39) என்பதும், தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வசித்து வரும் அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அவினாசிக்கு காரில் கடத்தி சென்று கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து புனாம ராம் சவுத்ரியை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 77 மூட்டைகளில் இருந்த ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 720 மதிப்பிலான 397 கிலோ புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

இதுகுறித்து ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டம், ஈரோடு கோட்டம், ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களுக்கு எதிர் வரும் 26ம் தேதி (புதன் கிழமை) அன்று காலை 11 மணிக்கு ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது.

மேற்படி முகாமில் விவசாய நிலங்களை நில அளவைத் துறை மூலம் அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முகாம் நடைபெற உள்ளது. எனவே, முகாமில் விவசாயிகள் கலந்து கொள்ளுமாறும் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு மாநகராட்சியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார மேலாளர், புள்ளியியல் உதவியாளர், நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள பொது சுகாதார மேலாளர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணியிடம் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

பொது சுகாதார மேலாளர் பணியிடங்களுக்கு இளங்கலை பட்டம் (விலங்கியல் அல்லது பூச்சியியல்) ஒரு பாடமாக உள்ள பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். புள்ளியியல் உதவியாளர் பணியிடத்திற்கு இளநிலை புள்ளியியல் அல்லது கணினியியல் பட்டம் அல்லது பட்டம் பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகர்புற சுகாதார செவிலியர் பணியிடமும், தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். நகர்புற சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு ஏஎன்எம் படித்தவர்கள் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவேற்றம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவமனை பணியாளர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரத்து 500ம் சம்பளம் வழங்கப்படும்.

இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களும் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். எக்காரணம் கொண்டும் பணி வரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

கல்வி சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை வருகின்ற 05 ஜூலை 2024ம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்புமாறு மாநகர நல அலுவலர் மருத்துவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் சாராய விற்பனை கட்டுபடுத்தப்பட்டு உள்ளது: எஸ்பி ஜவகர்

ஈரோடு மாவட்டத்தில் சாராய விற்பனை கட்டுபடுத்தப்பட்டு உள்ளது: எஸ்பி ஜவகர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கோட்டை மேட்டில் விஷ சாராயம் குடித்த 50 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் சாராய ஒழிப்பு நடவடிக்கை அரசு முடுக்கி விட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சாராய வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து, சாராய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் சாராய விற்பனை என்பது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் எந்தெந்த பகுதிகளில் சாராயம் தொடர்பாக புகார்கள் எழுந்த பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், டாஸ்மாக் மதுக்கடைகளில் மொத்தமாக மது வாங்கி அதை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு வெளியிடங்களில் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை படுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி: ஆட்சியர் பங்கேற்பு

கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி: ஆட்சியர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் 1433-ம் பசலி ஆண்டிற்கான கோபிசெட்டிபாளையம் உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு 2ம் நாள் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான ஜமாபந்தி ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் ஜூன் மாதம் 20ம் தேதி (நேற்று) முதல் தொடங்கப்பட்டு 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், அந்தியூர் வட்டத்தில் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

மேலும், பவானி, நம்பியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களில் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 20ம் தேதி அன்றும், (சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக) அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஜமாபந்தியின் இரண்டாவது நாளான இன்று (21ம் தேதி) கோபி உள்வட்டத்தைச் சேர்ந்த கரட்டுப்பாளையம், கோட்டுபுள்ளாம்பாளையம், அயலூர், பழைபாரியூர்கரை, அக்ரஹாரக்கரை, செய்யாம்பாளையம்கரை, வீரபாண்டி, பாரியூர், செங்கலக்கரை, மொடச்சூர், குள்ளம்பாளையம், (அ) கலிங்கியம், (ஆ) கலிங்கியம், லக்கம்பட்டி ஆகிய கிராம பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டு, அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 207 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதில், பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 8 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணையினை வழங்கினார். மேலும், இன்று(21ம் தேதி) இரண்டாம் நாள் பெறப்பட்ட மனுக்களின் மீது மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை- நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் அனைத்து பதிவுகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது தொடர்பான விளம்பர தட்டியினை வெளியிட்டார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை- நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

இதில், ஊரக பட்டா மாறுதல், ஊரக உட்பிரிவு, ஊரக எல்லை அளவு மனுக்கள் மற்றும் நத்தம் பட்டா மாறுதல், நத்தம் எல்லை அளவு மனுக்கள், நத்தம் உட்பிரிவு மனுக்கள் மற்றும் நகரம் பட்டா மாறுதல், நகரம் உட்பிரிவு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து மனுக்கள் மற்றும் புலப்படங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் https://tamilnilam.tn.gov.in/citizen/ , https://eservices.tn.gov.in/eservicesnew/home.html ஆகிய இணையதள முகவரியினை பயன்படுத்திக் பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஜமாபந்தியில், கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திக், உதவி இயக்குநர் (நில அளவை) ஹரிதாஸ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக பாரத ரத்னா Dr. அம்பேத்கர் கட்டிட தொழிலாளர் நலச் சங்கத்திற்கு கிடைத்த வெற்றி.....

தமிழக பாரத ரத்னா Dr. அம்பேத்கர் கட்டிட தொழிலாளர் நலச் சங்கத்திற்கு கிடைத்த வெற்றி.....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக பாரத ரத்னா Dr. அம்பேத்கர் கட்டிடத் தொழிலாளர் நலச் சங்கத்திற்கு கிடைத்த வெற்றி. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இரண்டு மின் கம்பங்கள் அமைப்பு.. ஆதிதிராவிடர் பகுதி மக்கள் மகிழ்ச்சி...
 
சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஒன்றியம் பள்ளிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட  ஆதிதிராவிடர் பகுதி கடைசி வீதியில், தெரு விளக்கு வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் மூன்று நான்கு வருட காலமாக  வசித்து வசித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனை குறித்து  பஞ்சாயத்து தலைவர், செயலாளர் ( கிளர்க் ) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மாவட்ட துணை ஆட்சியரிடமும்,  மின் கம்பம் அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தோம்,  ஆனால் எந்த  நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து நீங்கள் எங்கள் புகார் மனு மீது நடவடிக்கை  எடுக்கப்படாமல் காலம் தாழ்த்த நினைத்தால்  உங்கள் அலுவலகத்தை விட்டு நான் வெளியேற  மாட்டேன் அன்று  அலுவலகத்துக்கு உள்ளேயே  தமிழக பாரத ரத்னா Dr. அம்பேத்கர் கட்டிட தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் ராம்ஜி மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். 
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள், பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவரிடம் தொலைபேசில் தொடர்பு கொண்டு  உடனடியாக  மின் கம்பங்களை அப் பகுதியில் நீங்கள் அமைத்து தர வேண்டும், இல்லையென்றால் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின் அடிப்படையில், அவர்கள் ஒரு மாதம் இடைவெளி பின்  இன்று (21/06/24 ) காலை 11:00 மணிக்கு இரண்டு கம்பங்கள் பள்ளிப்பட்டி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் அப்பகுதியில் அமைத்துக் கொடுத்தனர். 
இது ஒரு தொடர் முயற்சிக்கு  கிடைத்த வெற்றி  
தமிழக பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட 
தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் ராம்ஜி பெருமிதம் தெரிவித்தார். இதற்கு சம்பந்தப்பட்ட பகுதி ஆதிதிராவிடர் நல மக்கள் தங்களது நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.