புதன், 26 ஜூன், 2024

ஈரோட்டில் ரத்த கொடையாளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஈரோட்டில் ரத்த கொடையாளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ரத்த கொடையாளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (26ம் தேதி)  நடைபெற்றது.

இதில், ரத்த கொடையாளர் விழிப்புணர்வு உறுதி மொழியான, ரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தன்னார்வ ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.


ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி எந்த உயிர் இழப்பும் ஏற்படாதிருக்க தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன் என உறுதி அளிக்கிறேன் என மருத்துவர்கள் மற்றும் இரத்த கொடையாளர்கள் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவை பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, ரத்த கொடையாளர்கள் 8 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகா சண்முகம், துணை இயக்குநர்கள் சோமசுந்தரம் (சுகாதாரப்பணிகள்), கவிதா (குடும்ப நலம்), மாவட்ட திட்ட மேலாளர் துரைசாமி, மாநகர் நல அலுவலர் பிரகாஷ், மாவட்ட ரத்த பரிமாற்று அலுவலர் சசிகலா, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ-ல் அடங்கிய உதவி ஆய்வாளர், வணிகவரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வன அலுவலர் உள்ளிட்ட 2,327 பணிக்காலியிடங்களுக்கான முதல்நிலை தேர்விற்கான தேர்வு அறிவிக்கை ஜூன் 20ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு வரும் செப்டம்பர் 19ம் தேதியன்று நடைபெற உள்ளது. தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 19ம் தேதி ஆகும்.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 2ம் தேதி காலை 10மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு, இலவச வைஃபை வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வுகள், வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள், மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள இணையதளத்துடன் கூடிய கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-2, குரூப்-4, டிஎன்யுஎஸ்ஆர்பி, டெட் ஆகிய பயிற்சி வகுப்புகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/VTRWijWVcgNBn57w5 என்ற லிங்க்கை கிளிக் செய்து தங்களது விவரங்களை பூர்த்தி செய்து தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், ஆதார்எண், புகைப்படம் இரண்டு, ஆகியவற்றுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு (ஐடிஐ அருகில், சென்னிமலை வழி) ஜூலை 2ம் தேதியன்று நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம். எனவே. ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஆண், பெண் இருபாலர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி: ஆட்சியர் தலைமையில் ஏற்பு

கோபியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி: ஆட்சியர் தலைமையில் ஏற்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று (26ம் தேதி) ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாள் சர்வதேச அளவில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ஈரோடு மாவட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று (26ம் தேதி) கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியான, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.

நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரத்துல்லா (பொது), உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
ஈரோட்டில் மனநலம் பாதித்த பெண்ணை கற்பழிக்க முயன்ற முதியவருக்கு தர்ம அடி

ஈரோட்டில் மனநலம் பாதித்த பெண்ணை கற்பழிக்க முயன்ற முதியவருக்கு தர்ம அடி

ஈரோடு பழைய பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 67). இவர் கிடைக்கும் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்துடன் தங்கி உள்ளார். நேற்று இரவு ஆறுமுகம் மது போதையில் அந்த பகுதி வழியாக சென்றபோது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அங்கு சென்று இருந்தார்.
அவரை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி சென்று வாயில் துணியை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஆறுமுகம் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆத்திரத்தில் அப்பகுதி மக்கள் ஆறுமுகத்துக்கு தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர், இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆறுமுகத்தை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மறவன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 50). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று (25ம் தேதி) மாலை அந்தியூரிலிருந்து பர்கூர் கொங்காடை செல்லும் அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார். 
அப்போது, தாமரைக்கரையிலிருந்து கொங்காடை நோக்கி பேருந்தை ஓட்டியபடி வந்து கொண்டிருந்தார். அப்போது, பேருந்து தொள்ளிப்பிரிவு அருகே சென்ற போது, பின்னால், வந்த இருசக்கர வாகனத்துக்கு வழிவிடவில்லை என கூறப்படுகிறது.

இதனால், பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த தாளக்கரையைச் சேர்ந்த தேவராஜ், சிவராஜ், தட்டக்கரையைச் சேர்ந்த சதீஸ் ஆகிய மூவரும் பேருந்தின் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு பேருந்து மீது கற்களை வீசினர். இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைந்து நொறுங்கியது. இதனால், பேருந்தில் பயணம் செய்த 3 பயணிகள் சிறு காயமடைந்தனர். 

இதனையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், அவர்கள் மூவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், தேவராஜ் மதுபோதையில் இருந்ததால் கீழே விழுந்து மயக்க நிலையை அடைந்தார்.

இதனையடுத்து, அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இதுகுறித்து, பர்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் விசாரிக்கின்றனர்.
தனி நபரால் தொடங்கப்பட்ட சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி.

தனி நபரால் தொடங்கப்பட்ட சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் தினம்... சேலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் விழிப்புணர்வு பிரச்சாரம்...

ஆண்டுதோறும் ஜூன் 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி சேலத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
குறிப்பாக சேலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் பார்த்தசாரதி என்கின்ற தனிநபரும் UTKARSH SMALL FINANCE BANK ஆகியோர் இணைந்து நடத்திய போதையில்லா இளைய தலைமுறையை உருவாக்கிடுவோம் என்ற நோக்கில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் சேலம் கோரிமேடு அருகே உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே தொடங்கியது. சேலத்தை சேர்ந்து சமூக சேவகர் பார்த்தசாரதி கொடிய செய்து துவக்கி வைத்து இந்த விழிப்புணர்வு வாகன பேரணியானது சேலம் மாநகரின் ஐந்து முக்கிய இடங்களில் அதாவது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு வாகனம் நிறுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கி போதைப் பொருட்களின் பயன்பாட்டை 100% முற்றிலும் ஒழித்திடுவோம் நம் ஆரோக்கியத்தையும் நம் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் பேணி காப்போம் என பாதசாரிகள் அனைவருக்கும் துண்டு பிரசவங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
.இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து சமூக சேவகன் பார்த்தசாரதி நம்மிடையே கூறுகையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமான இன்று இந்த பிரச்சார பயணத்தை துவக்கி உள்ளதாகவும், இது குறித்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் அறக்கட்ட விழிப்புணர்வு போராட்டங்கள் ஏற்பட்டு பட்டிருந்தாலுமே கூட ஒரு முயற்சியாக தங்களால் இதில் ஓரளவுக்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்த பயணத்தை துவக்கி உள்ளதாகவும் போதை வஸ்துக்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கூட ஆங்காங்கே வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி தமிழகத்திற்கு கொண்டுவரும் போதைப் பொருட்கள் ஆங்காங்கே அவ்வப்பொழுது பறிமுதல் செய்யப்பட்டு தான் வருகிறது என்றும் தமிழக அரசு முழு முனைப்புடன் செயல்பட்டு தமிழகத்தில் நூறு சதவிகிதம் போதை பொருள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

செவ்வாய், 25 ஜூன், 2024

கோபியில் 3ம் நாள் ஜமாபந்தி

கோபியில் 3ம் நாள் ஜமாபந்தி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவலூர் உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு 3ம் நாள் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று (25ம் தேதி) நடைபெற்றது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் ஜூன் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. 

அதன்படி, ஜமாபந்தி மூன்றாவது நாளான இன்று (25ம் தேதி) சிறுவலூர் உள்வட்டத்தைச் சேர்ந்த பொலவக்காளிபாளையம், நாதிபாளையம், நாகதேவம்பாளையம், கொளப்பலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், கடுக்காம்பாளையம், சந்திராபுரம் ஆகிய கிராம பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 232 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், பெறப்பட்ட மனுக்களின் மீது மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா, கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திக், உதவி இயக்குநர் (நில அளவை) ஹரிதாஸ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.