ஈரோடு மாவட்டத்தில், புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வது, போக்குவரத்து செய்வது, இருப்பு வைப்பது மற்றும் சில்லறை விற்பனை செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்தால், உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் கடை மூடப்பட அவசரத் தடையாணை பிறப்பிக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் நியமன அலுவலர் டாக்டர். தங்கவிக்னேஷ் மற்றும் 16 பேர் கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையினரோடு ஒருங்கிணைந்து 5,181 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 438 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.24 லட்சத்து 17 ஆயிரத்து 630 மதிப்பிலான சுமார் 2,822.33 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டதில், 1,905 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு குழு மூலமாக அழிக்கப்பட்டது. எஞ்சியுள்ள புகைப்பொருட்கள் காவல்துறையின் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில், கூலிப் மட்டும் 259 கடைகளில் சுமார் 456.605 கிலோ கண்டறியப்பட்டு (அதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 72 ஆயிரத்து 204) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி, 438 பொருட்களின் விற்பனையாளர்கள் மீது ரூ.69 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 438 கடைகளும் மூடப்பட்டுள்ளது.
அதில், முதல் முறையாக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் 306 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் அபராதமும், இரண்டாவது முறையாக தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 4 நபர்களுக்கு தலா ரூ..50 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்பொழுது அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் உணவுத்தொழில் செய்து வரும் வணிகர்கள் இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில் உணவுப்பொருட்களின் தரம் தொடர்பான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம்.
இனி வருங்காலங்களில் உணவு பாதுகாப்புத்துறையினரின் ஆய்வின்போது தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்வது முதன்முறையாக கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதமும், 15 நாட்கள் கடையினை மூடவும், இரண்டாம் முறை கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதமும், ஒரு மாதம் கடையினை மூடவும், மூன்றாம் முறையாகக் கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன், 90 நாட்கள் கடையினை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தொடர்ந்து, விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு, கடையினை நிரந்தரமாக மூடிட உத்தரவிடப்படும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் திரும்ப ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.