சனி, 29 ஜூன், 2024

தாளவாடி அருகே சாலையில் வந்த காரை மிரட்டிய யானை

தாளவாடி அருகே சாலையில் வந்த காரை மிரட்டிய யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்கின்றன. இவை இரவு மற்றும் பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலைகளில் நடமாடுகின்றன.
இந்நிலையில், நேற்று ஆசனூரிலிருந்து கேர்மாளம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் கெத்தேசால் மலைக் கிராமம் அருகே சாலையோரம் இரண்டு தந்தங்களுடன் கூடிய ஆண் யானை ஒன்று மரக்கிளைகளை தின்று கொண்டிருந்தது.

அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் காட்டு யானையை கண்டு அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தி, யானையை செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினர். அப்போது, எதிரே அந்த வழியாக அதிக ஒலி எழுப்பியபடி கார் ஒன்று வந்தது.

இதனால், ஆத்திரமடைந்த யானை அந்த காரை துரத்தி மிரட்டியது. எனினும், கார் ஓட்டுநர் யானையிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டியதால் உயிர் தப்பினார். இந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். தற்போது, இது வைரலாகி வருகிறது.
சென்னிமலை அருகே தாயை கழுத்தறுத்துக் கொன்ற மகனை தேடும் போலீஸ்

சென்னிமலை அருகே தாயை கழுத்தறுத்துக் கொன்ற மகனை தேடும் போலீஸ்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயியான இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி பாப்பாத்தி (வயது 75). இவர்களுடைய மகன் குப்புசாமி என்கிற பழனிச்சாமி (வயது 46). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், குப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது தாய் பாப்பாத்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே, அவர்களுக்கு சொந்தமான காட்டை தாய் விற்றுள்ளார். இதில் தனக்கான பங்கு தொகையை குப்புசாமி ஏற்கனவே பெற்று செலவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை குப்புசாமி தனது தாய் பாப்பாத்தியிடம் விவசாய நிலம் விற்ற மீதி பணத்தை வாங்கி தன்னிடம் தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் குப்புசாமி ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து அறுத்து விட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் இறந்தார். இதைப்பார்த்த குப்புசாமி அங்கிருந்து தலைமறைவானார்.

பின்னர், சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான குப்புசாமியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சென்னிமலை சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் பண ஆசை காட்டி ரூ.20 லட்சம் மோசடி: மூவர் கைது

ஈரோட்டில் பண ஆசை காட்டி ரூ.20 லட்சம் மோசடி: மூவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் அண்ணமார் பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 54). செங்கல்சூளை மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 3ம் தேதி இவரது கடைக்கு அருகில் வசிக்கும் நண்பரின் உறவினரான கொங்காடையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
மூர்த்தி, தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உள்ளார் என்றும், அவரிடம் ரூ.20 லட்சம் கொடுத்தால் ரூ.30 லட்சம் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி, முத்துசாமி மூர்த்தியுடன் அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவல்பூந்துறை பேருந்து நிறுத்தம் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஒரு நபர் மரப்பெட்டியில் கட்டுக்கட்டாக வைத்திருந்த பணத்தில் மூன்று 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சோதித்து பார்க்க கொடுத்துள்ளார். அதனை, வாங்கி பரிசோதித்த முத்துசாமிக்கு அது நல்ல நோட்டு என தெரிந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி முத்துசாமி ஈரோடு நாச்சியப்பா வீதியில் உள்ள ஒரு பூக்கடை சந்தில் ரூ. 20 லட்சத்தை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். அந்த நபரும் தான் கொண்டு வந்த பேக்கில் ரூ‌30 லட்சம் இருப்பதாக கூறி அதனை கொடுத்து விட்டு சென்றுள்ளார். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து முத்துசாமி பேக்கை திறந்து பார்த்த போது, அதில் வெள்ளைத் தாள்கள் கட்டுக்கட்டாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்ததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துசாமி இதுகுறித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் லக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 54), பிரபு (வயது 39) மற்றும் ஈரோடு 60 வேலம்பாளையம் வெள்ளிவிழா காலனியைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 58) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆம்னி கார் மற்றும் பதிவு இல்லாத இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

வெள்ளி, 28 ஜூன், 2024

பவானிசாகர் அணை நீர்மட்டம் 64 அடியாக உயர்வு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 64 அடியாக உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் முக்கிய நீராதாரங்களாக நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று (ஜூன்.28) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5,894 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.29) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,149 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 62.44 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 64 அடியாக உயர்ந்தது. அதாவது, கடந்த 4 நாட்களில் 5.37 அடி வரை உயர்ந்துள்ளது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 126 மனுக்கள்: உடனடி தீர்வுக்கு பரிந்துரை

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 126 மனுக்கள்: உடனடி தீர்வுக்கு பரிந்துரை

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (28ம் தேதி) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 28.06.2024 முடிய 246.4 மி.மீ பெய்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 61.27 அடியாகவும், 7670 மி.கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 296 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 68 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 47.5 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 185 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ரசாயன உரங்களான யூரியா 7636 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 2448 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2478 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 15427 மெட்ரிக் டன்னும் மற்றும் எஸ்.எஸ்.பி. 1045 டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. 2024-25-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது.

இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டுவந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேளாண்மைத்துறையின் மூலம் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பொருட்டு நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவி பயிர்சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் முதிர்ச்சியடைந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நெல் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம்.

மேலும், விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.

இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து திட்டப்பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மானியக் கோரிக்கை 2024-25 இல், வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள், ஈரோடு மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து 126 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன், துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார், பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
அம்மாபேட்டை அருகே சாராய பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

அம்மாபேட்டை அருகே சாராய பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் நேற்று (27ம் தேதி) ரோந்து சென்றனர். அப்போது, பி.கே.புதூர் பாலமலை அடிவாரப் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வெள்ளை நிற சாக்கு மூட்டையுடன் இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். 

விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்கா கொளத்தூர் அருகே உள்ள பாலமலை நமன்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் தர்மலிங்கம் (வயது 46)) என்பதும், அவர் விற்பனைக்காக 6 லிட்டர் 300 மில்லி சாராயத்தை 14 பாக்கெட்டுகளில் நிரப்பி கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6.3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், தர்மலிங்கத்தை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காலிங்கராயன் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்

காலிங்கராயன் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 740 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து, காலிங்கராயன் வாய்க்கால் பிரிந்து செல்கின்றது. இந்த வாய்க்காலானது, ஈரோடு ஊஞ்சலூர் மற்றும் கொடுமுடி வழியாக 56 மைல் 5 பர்லாங் 330 அடி (91 கி.மீ) தூரம் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கின்றது. இந்த வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றது. இப்பாசன நிலங்களில் நெல், மஞ்சள், வாழை மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.

அதன்படி, ஈரோடு வட்டம், காலிங்கராயன் வாய்க்காலில் தூர்வாரும் பணி பள்ளிபாளையம் முதல் காரவாய்க்கால் வரை நடைபெற்று வருகின்றது. தற்போது பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏதுவாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவசாயிகள் எளிதாக நீர்பாசன வசதி கிடைப்பதால விளைச்சல் அதிகரித்து பெருமளவில் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.